வேதியியல் தேர்வில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு.


வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததால் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை
குறைய வாய்ப்புள்ளது என வேதியியல் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

          பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான முதல் பிரதானத் தேர்வாக வேதியியல் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய கே.சுந்தரமூர்த்தி, ரா.கவிதாயினி, பி.கலைச்செல்வன் உள்ளிட்டோர் கூறியது: புளு பிரிண்ட்டில் உள்ளது போன்றே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. கட்-ஆஃப் மதிப்பெண்ணில் முக்கியத்துவம் பெறும் என்பதால் வேதியியல் பாடத்துக்கு கூடுதல் முன்தயாரிப்புகளை மேற்கொண்டோம். இந்த வினாத்தாளில் 3 மதிப்பெண், 5 மதிப்பெண் மற்றும் பெரிய வினாக்கள் (10 மதிப்பெண்) எளிதாக இருந்தன. அதேநேரத்தில் ஒரு மதிப்பெண் வினா பகுதியில் டைமெத்தில் ஈரிணைய பியூட்டைல் அமீனின் ஐயுபிஏசி பெயர் (வினா எண் 6), ள்ல்2- இனக்கலப்பை பெற்றிருக்காத அயனி (25-ஆவது வினா), கீழ்கண்டவற்றுள் எதில் வீழ்படிவாக்குதல் செயல் இல்லை (19-ஆவது வினா) உள்ளிட்ட சில வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. இதனால் முழு மதிப்பெண் பெறுவது சற்று கடினம் என்றனர். 5 வினாக்கள் கடினம்:
இது குறித்து திருப்பூர் மாவட்டம் கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் பி.சுரேஷ்குமார், வேலூர் விருஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் ஜே.வினோத் ஆகியோர் கூறியது: வேதியியல் வினாத்தாளில் 6, 7, 19, 22, 25 என 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது உண்மைதான். இருப்பினும் அணைவு எண் நான்கு கொண்ட சேர்மத்துக்கான சான்று, கீழ்க்கண்டவற்றில் எது ஒளிச்சுழற்சி பண்புடையது உள்பட பல எளிதான கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் கட்டாய வினா பகுதியில் தலா 5 மதிப்பெண் கொண்ட இரு வினாக்களும் எளிதாகவே இருந்தன. சராசரி மாணவர்களுக்கு இந்தத் தேர்வு வரப்பிரசாதம். ஆனால் முழு மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்திருந்த மாணவர்களுக்கு சற்று கவலையளித்திருக்கும். கடந்த ஆண்டு வேதியியல் தேர்வில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் 190 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank