பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு : மாணவர்களை குழப்பிய 'நான்'
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளுக்கு, நேற்று தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாகவும், சிந்தித்து பதில் எழுதும் வகையிலும் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண்ணுக்கான, 20 வினாக்கள்
தரமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுக்குரிய, வினாத்தாள் போல இருந்தது. இலக்கண பகுதியில், 10 மதிப்பெண்களுக்கு, கடினமான வினாக்கள் இடம்பெற்றன. வினாத்தாளில், 28வது வினாவில், ஆசிரியப்பாவின் இலக்கணம் குறித்து கேட்கப்பட்டிருந்தது. இந்த வினா, இதற்கு முன் தேர்வுகளில் இடம்பெறாத புதிய வினாவாக இருந்தது. ஒரு மதிப்பெண்ணில், 'நான் தமிழ் புத்தகம் படிக்க வேண்டும்' என்ற வார்த்தைக்கு, வேற்றுமை உருபு கண்டுபிடிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இதற்கு வேற்றுமை உருபாக, 'நான்' என்பதை, 'எனக்கு' என, மாற்றி எழுத வேண்டும். ஆனால், பல மாணவர்கள், 'நான் தமிழ் புத்தகத்தை படிக்க வேண்டும்' என, எழுதியுள்ளனர். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.
தமிழ் ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழ் புத்தகத்தின் மொழி திறன் பயிற்சியில், 'நான் மழையில் நனைவது பிடிக்கும்' என்ற வார்த்தை, 'எனக்கு மழையில் நனைவது பிடிக்கும்' என, கூறப்பட்டுள்ளது. இதன்படி, 'நான் தமிழ் புத்தகம் படிப்பது பிடிக்கும்' என, வினா இடம்பெற வேண்டும்.ஆனால், 'நான் தமிழ் புத்தகம் படிக்க வேண்டும்' என, வினாவின் வரிகள் மாறியுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். அதனால், மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.