வெளிநாட்டு வேலை கிடைத்தும் சேர முடியலை - அண்ணா பல்கலை மாணவர்கள் தவிப்பு.
அண்ணா பல்கலையில் பட்ட சான்றிதழ் கிடைக்காமல், லட்சக்கணக்கான இன்ஜினியர்கள், வெளிநாடு வேலை வாய்ப்பைஇழந்துள்ளனர்.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில், அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என, 600க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவை அனைத்தும், அண்ணா பல்கலை பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள் மட்டும், சிலபாடங்களுக்கு தாங்களே பாடத்திட்டம் தயார் செய்து, பல்கலை அனுமதி பெற்று, பாடம் நடத்துகின்றன.இந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேர்கின்றனர். ஐந்து லட்சத்துத்துக்கும் மேற்பட்டோர், படிப்பை முடிக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பல்கலை, பட்ட சான்றிதழை வழங்கும்.அதற்கு முன், பல்கலையில் பட்டமளிப்பு விழா முடிந்து, சிண்டிகேட் ஒப்புதல் வழங்கியதும், கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு துணைவேந்தர் இல்லாததால், பட்டமளிப்பு விழா நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், பட்டம் கிடைக்காமல், படிப்பு முடித்தோர் காத்திருக்கின்றனர்.இவர்களுக்கு பல கல்லுாரிகளில், நேரடி கேம்பஸ் தேர்வு நடத்தப்பட்டு, வெளிநாடுகளில், வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்தந்த நாட்டு துாதரகம் மூலம், பட்ட சான்றிதழை காட்டி, அனுமதி பெற்றால் மட்டுமே, வெளிநாட்டு நிறுவனங்களில், வேலையில் சேர முடியும்.தற்போது பட்ட சான்றிதழ் இல்லாததால், இந்த வேலைகளில் சேர முடியாமல், புதிய பட்டதாரிகள் தவிக்கின்றனர். எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்து, பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.