பாரத ஸ்டேட் வங்கி ( SBI ) சேமிப்பு கணக்கு: ரூ.5,000 இருப்பு அவசியம்
சென்னை உள்பட பெரு நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாதந்தோறும் குறைந்தபட்சம்
ரூ.5,000 வீதம் பராமரிக்க வேண்டும்.
சேவைக் கட்டணங்களைத் திருத்தி அமைத்து அதிகாரப்பூர்வ அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.
திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.3,000, சிறிய ஊர்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.2,000, கிராமங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 வீதம் கணக்கில் பராமரிப்பது அவசியம்.
சேவைக் கட்டணம் என்ற பெயரில்...மேலே குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து தொகையின் பற்றாக்குறைக்கு ஏற்ப தன்னிச்சையாக குறிப்பிட்ட தொகை சேவைக் கட்டணமாக கழிக்கப்படும். உதாரணமாக சென்னை உள்பட பெருநகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவர், வரும் ஏப்ரல் மாத இறுதியில் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.2,500 மட்டும் வைத்திருந்தால், சேவைக் கட்டணமாக ரூ.50 மற்றும் சேவை வரியும் சேர்த்து அந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து தன்னிச்சையாகப் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு தொகை குறைவுக்கு ஏற்ப சதவீத அடிப்படையில் ரூ.75, ரூ.100 (சேவை வரியுடன் சேர்த்து) சேவைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பணம் செலுத்தினாலும், எடுத்தாலும்...இதேபோன்று சேமிப்புக் கணக்கிலிருந்து ஒருவர் மாதத்துக்கு 3 முறைக்கு மேல் பணம் செலுத்தினாலோ அல்லது பணம் எடுத்தாலோ தன்னிச்சையாக வங்கிக் கணக்கில் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யும் முறையையும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இணையதள பண பரிமாற்ற சேவைக் கட்டணம் உள்பட பிற கட்டணங்களும் தொகைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
பிற வங்கி அதிகாரிகள் கருத்து... மத்திய அரசின் இந்த கட்டண நிர்ணயம் தவறானது. பாரத ஸ்டேட் வங்கியில் சேவைக் கட்டண அமல் தொடங்கி விட்டால், பிற தேசிய வங்கிகளிலும் சேவைக் கட்டண நிர்ணயித்தல் நடைமுறை விரைவில் அமலுக்கு வந்துவிடும். மேலும் வங்கிக் கணக்கு, ஏடிஎம் மையத்திலிருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதித்தால், ஒரே தடவையில் அதிக பணத்தை வாடிக்கையாளர் எடுத்து வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.
நிதி அமைச்சர் தலையிட வலியுறுத்தல்: சேவைக் கட்டணம் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் கூறியது: சாதாரண மக்கள் மீது கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி சுமத்துவது தண்டனையாகும். பாரத ஸ்டேட் வங்கியின் வருவாயைப் பெருக்க சேவைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகக் கூறுவது நியாயமற்றது. எனவே மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடனடியாகத் தலையிட்டு பாரத ஸ்டேட் வங்கியின் சேவைக் கட்டண உயர்வு அறிவிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.