TET நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்
'அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 'அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,200 ஆசிரியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும் TET தேர்வு களில், தேர்ச்சி பெற வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது; ஆனால், 2013க்கு பின் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட உத்தரவில், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.,29, 30 ல் நடக்கும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் நியமனம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் பெறுகின்றனர். இதனால், சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை சேர்ந்த 3௦00 ஆசிரியர்களின் நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகி கூறியதாவது:'குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்' என, அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது. ஏழு ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் பள்ளிகளில், TET தேர்ச்சி இல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'சிறப்பு பணியிடை பயிற்சி' அளித்து பணியில் தொடரவும், தேர்ச்சி மதிப்பெண் 82 எனவும் உத்தரவிட்டது போல், உதவிபெறும் பள்ளிகளில் 23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.கடந்த 2013 முதல் தேர்வே நடத்தாமல் திடீரென இப்போது அறிவித்து, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.