வங்கி சர்வர் பிரச்னை: TET,தேர்வர்கள் அவதி
காரைக்குடி:வங்கிகளில் சர்வர் பழுதால் டி.இ.டி., தேர்வு கட்டணம் செலுத்துபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு மூன்று ஆண்டுக்கு பிறகு வருகிற ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 12 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 23-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். சிவகங்கை மருதுபாண்டியன் மேல்நிலை பள்ளி, தேவகோட்டை ஆறாவது வார்டு நகராட்சி மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேர்வு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான செலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படுகிறது. இந்த செலானில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., கனரா வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் ஐ.ஓ.பி., வங்கியில் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் பழுது என்ற காரணத்தை கூறி, தேர்வு கட்டணத்தை வாங்க மறுப்பதால் தேர்வர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
காரைக்குடி வைரவபுரத்தை சேர்ந்த எம்.ராஜதுரை கூறும்போது: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்துக்குரிய செலானும் இணைத்தே வழங்கப்படுகிறது. இந்த செலானில் ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ள மூன்று வங்களில் ஒன்றை நாம் தேர்வு செய்து அதை செலானிலும், விண்ணப்பத்திலும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அவ்வாறு பூர்த்தி செய்து வங்கிக்கு செல்லும்போது, சர்வர் பழுதால் பணம் வாங்க மறுக்கின்றனர். வேறு வங்கியில் பணம் செலுத்த கூறுகின்றனர். இதனால், செலானில் பூர்த்தி செய்த வங்கி விபரத்தையும், விண்ணப்பத்தில் குறிப்பிட்டதையும் ஒயிட்னர்
மூலம் அழித்து மாற்ற வேண்டி உள்ளது. விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது, எந்த வித அடித்தல் திருத்தல் இருக்க கூடாது, என விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் என்பதால் மாற்று விண்ணப்பம் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ள வங்கிகள் தேர்வு கட்டணத்தை பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைசி நேரத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, வங்கிகள் இவ்வாறு பணத்தை வாங்க மறுத்தால், தேர்வர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும், என்றார்.