TNTET - ஆசிரியர் பணிக்கு TRB ஆதார் எண் சேகரிப்பு.
அரசு பள்ளிகளில், 1,111 ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 'ஆதார்' எண் உட்பட, ஏழு வகையான விபரங்களை பதிவு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அவகாசம் அளித்துள்ளது.
அரசு பள்ளிகளில், 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், கல்வித் தகுதி அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்; அதன்படி, நியமனம் நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்து உள்ளது. இந்நிலையில், தரவரிசை பட்டியலுக்கான சுயவிபரங்களை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.
இதில், தேர்வரின் ஆதார் எண் கேட்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி, கூடுதலாக பெற்ற பட்டப் படிப்பு; தமிழ் வழி பி.எட்., படிப்பு; மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்; சிறப்பு கல்வியில், பி.எட்., படிப்பு; பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்டவற்றை, தேர்வர்கள் திருத்தம் செய்யலாம் என, கூறப்பட்டு உள்ளது. தேர்வரின் சமீபத்திய புகைப்படம், 'டிஜிட்டல்' கையெழுத்து போன்றவற்றையும், பதிவேற்றம் செய்ய வேண்டும். 'ஆன்லைன்' வழி திருத்தங்களை, மார்ச், 20 இரவு, 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.