10 ஆயிரம் மடங்கு வெளிச்சம் கொண்ட செயற்கை சூரியன்: ஜெர்மனி ஆய்வாளர்கள் அசத்தல் சாதனை!!!

பூமிக்கு ஒளியையும், உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான கதகதப்பையும் வழங்கி வரும் கதிரவனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர்.



பெர்லின்:

‘வதனமே சந்திர பிம்பமோ..,?’, ‘நூறு கோடி சூரிய ஒளியால் ஆன ஜோதி முகம்’ போன்ற தமிழ் திரையிசைப் பாடல் வரிகளை கொண்ட காதல் காட்சிகளை பார்க்கும் நமது ரசிகர்கள் அதன் உட்பொருளை எல்லாம் மறந்துவிட்டு, காட்சி அமைப்பின் சிருங்காரத்திலும், கதாநாயகன் - நாயகியின் அங்க அசைவுகளிலும் தங்களை பறிகொடுத்தவர்களாய் மயங்கி கிடந்ததுண்டு.

ஆனால், ஒரே நேரத்தில் பத்தாயிரம் சூரியன் கொடுக்கும் பிரகாசத்தையும், வெப்பத்தையும் பிற்காலத்தில் ஜெர்மனி நாட்டு ஆய்வாளர்கள் செயற்கை சூரியனாக உருவாக்குவார்கள் என அவர்களில் யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது.

ஒரே நேரத்தில் மூவாயிரத்து ஐநூறு சென்ட்டிகிரேட் வெப்பத்தை உமிழக்கூடிய இந்த செயற்கை சூரியனின் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, கரியமில வாயு கலப்பில்லாத, புதிய ரக எரிபொருளை கண்டுபிடிப்பதற்கான முன்முயற்சியாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இயற்கையான சூரிய ஒளியை ‘சன்லைட்’ என்று அழைப்பதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை சூரியனுக்கு ‘சின்லைட்’ என அவர்கள் பெயரிட்டுள்ளனர்
சாதாரணமாக, அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்வதற்கு சூரிய ஒளியை பல கண்ணாடிகள் மற்றும் இரும்பு தகடுகளின் மூலம் உள்வாங்கி, அவற்றை ஒருசேர ஒரு இடத்தில் பாய்ச்சுவதன் வாயிலாக கிடைக்கும் ஆற்றல்தான் தண்ணீரில் பாய்ச்சப்படுகிறது.

இந்த சூரிய வெப்பம் தண்ணீரில் ஏற்படுத்தும் கொதிநிலையின்போது வெளியாகும் ஆற்றல்தான் டர்பைன்களின் மூலமாக நீராவியாக உந்தப்பட்டு, மின்சார சக்தியாக உருமாற்றமடைகிறது. இதே தொழில்நுட்பத்தை மையமாக வைத்து இயற்கை சூரியனைவிட பன்மடங்கு வெப்பம் கொண்ட செயற்கை சூரியனை உருவாக்கினால் என்ன? என்ற யோசனை ஜெர்மனி நாட்டின் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்களுக்கு எற்பட்டது.

இந்த எண்ணம் செயல்வடிவம் பெற்றபோது சினிமா படத்தை ஓடவிடும் புரொஜெக்டர்களில் பயன்படுத்தப்படும் அதிகமான ஒளியை உமிழும் பல்புகள் இவர்களின் கவனத்துக்கு வந்தது.

இந்த வெப்பசக்தியின் மூலம் நீராவியின் உந்துதலால் ‘ஹைட்ரஜன்’ எனப்படும் ஜலவாயு சக்தியை ஏராளமாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை தற்போது பிறந்துள்ளது. இந்த சக்தியை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத ஹைட்ரஜன் எரிபொருளாக உற்பத்தி செய்தால் எதிர்காலத்தில் விமானங்கள் மற்றும் கார்களுக்கு தேவையான உயர்ரக எரிபொருளுக்கான தட்டுப்பாட்டை தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜெர்மனியின் கோலேன் நகரில் இருந்து சுமார் 19 மைல் தூரத்தில் உள்ள ஜூலிச் என்ற இடத்தில் சமீபத்தில் 147 பல்புகளை ஒருசேர ஒரே நேரத்தில் ஒளிர வைத்து அதன் வெப்பத்தை கணக்கிட்டபோது அது இயற்கை சூரியனைவிட பத்தாயிரம் மடங்கு அதிகமான உஷ்ணத்தை வெளிப்படுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த புரொஜெக்டர்கள் உமிழ்ந்த வெப்பம் மூவாயிரத்து ஐநூறு சென்ட்டிகிரேட் வெப்பத்தை எட்டியதாகவும், மூடிய அறைக்குள் இவ்வளவு வெப்பமும், வெளிச்சமும் ஒருசேர பாயும்போது, அந்த அறைக்குள் நுழையும் ஒருவர் சில வினாடிகளுக்குள் உடல் கருகி இறந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத இதைப்போன்ற ஹைட்ரஜன் எரிபொருளின் மூலம் எதிர்காலத்தில் விமானங்கள் மற்றும் கார்களை இயக்க நேரும்போது பல கோடி டன் ஹைட்ரஜன் வாயுவை நாம் உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்
ஆனால், இவ்வளவு ஆற்றல் வாய்ந்த செயற்கை சூரிய ஒளியையும், வெப்பத்தையும் உருவாக்குவதற்கு சிலமணி நேரத்துக்கு மட்டும் தேவைப்படும் மின்சாரமானது, நான்கு நபர்கள் கொண்ட ஒரு குடும்பம் ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு இணையானது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)