ஒரு ஆண்டு முழுவதும் "இன்டர்நெட்" கட்டணம் ரூ.200 மட்டுமே!! - இது எப்படி இருக்கு??
கனடா நாட்டைச் சேர்ந்த டேட்டாவின்ட் நிறுவனம் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.200 கட்டணத்தில் இன்டர்நெட் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ரூ.100 கோடி முதலீட்டில் தொலைத்தொடர்பு சேவையில் இறங்க உள்ள டேட்டா வின்ட் நிறுவனத்தின் திட்டமே இன்டர்நெட் அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்து, சந்தையைப் பிடிப்பது தானாம்.
மத்திய அரசிடமிருந்து இன்னும் ஒருமாதத்தில் அனுமதி கிடைக்க இருக்கும் நிலையில், களத்தில் இறங்க டேட்டா வின்ட் நிறுவனம் தயாராகிவிட்டது.
ஏற்கனவே இந்த நிறுவனம் இந்தியாவில் குறைந்தவிலையில் டேப்லட், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது, இந்நிலையில் தொலைத்தொடர்பு சேவையிலும் இறங்க அனுமதி கிடைக்க உள்ளது.
தொலைத்தொடர்புதுறையில் களத்தில் இறங்கும் டேட்டாவின்ட் நிறுவனம் தனியாகச் செயல்படாமல், மற்றொரு நிறுவனத்துடன் இணைந்தே செயல்பட உள்ளது
இது குறித்து டேட்டா வின்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனீத் சிங் துளி டெல்லியில் நேற்று கூறுகையில், “மத்திய அரசிடமிருந்து இந்தமாதம் அல்லது அடுத்த மாதத்துக்குள் தொலைத்தொடர்பு சேவைக்கான அங்கீகாரத்தை பெற்று விடுவோம். முதல்கட்டமாக ரூ.100 கோடி முதலீடு செய்ய இருக்கிறோம், எங்கள் கவனம் முழுவதும், டேட்டா சேவை மட்டுமாகவே இருக்கும்.
எங்கள் நோக்கம் இந்திய மக்களுக்கு மாதத்துக்கு ரூ.20 கட்டணத்தில், ஆண்டுக்கு ரூ.200க்கு மிகாமல் இன்டர்சேவை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது தான்.
இப்போது ஜியோ நிறுவனத்தில் மாதத்துக்கு குறைந்தபட்சம் 300 ரூபாய் இன்டர்நெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் மாதத்துக்கு ரூ.1400 வரையிலும் செலுத்தியவர்களுக்கு ஜியோ வந்தபின் செலவு குறைந்துள்ளது. ஆனால், எங்கள் நிறுவனம் மூலம் மாதத்துக்கு ரூ.20 கட்டணமும், ஆண்டுக்கு ரூ.200 கட்டணத்திலும் இன்டர்நெட் சேவை அளிக்க இருக்கிறோம்.
எங்களுடைய சேவை நிச்சயம் 4ஜிசேவையாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.
இப்போதுள்ள நிலையில் ஜியோ நிறுவனம் மட்டுமே ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மாதம் ரூ.303 செலுத்தினால், அன்லிமிடட் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை அளித்துள்ளது.
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன், ஏர்டெல், ஐடியா நிறுவனமும் நாள்தோறும் 1ஜி.பி. டேட்டா என்று 30 நாளுக்கு 30 ஜி.பி. டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற கணக்கில் ரூ.335 கட்டணத்தில் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டேட்டா வின்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு கடும் போட்டியாகவே இருக்கும்.
யார் எப்படி போட்டிபோட்டால் என்ன… மக்களுக்கு சலுகை விலையில் இன்டர்நெட் இணைப்பு யார் கொடுக்கிறார்கள் என்பதே முக்கியம்….