நீட் காலக்கெடு நீட்டிப்பால் 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாய்ப்பு!
தேசிய தகுதி நுழைவுத்தேர்வு என்னும் நீட் (National Eligibility Entrance Test) வரும் மே மாதம் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சமீபத்தில் மருத்துவம் படிப்பதற்காக 'நீட்' எனும் நுழைவுத்தேர்வை
நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நீட் என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் கடுமையான பாடத் திட்டத்தால், இந்திய கிராமப்புற மாணவர்களிடம் இருந்து இதற்கு
பரவலாக எதிர்ப்புக் குரல் கிளம்பியது. குறிப்பாக, அதிக கிராமப்புற மாணவர்களைக் கொண்ட தமிழ்நாட்டுக்கு இத் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று அரசும், மாணவர்களும் போராடி வந்தனர். இக்கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு, மே 7ஆம் தேதி நுழைத்தேர்வு கண்டிப்பாக நடக்கும் எனக் கூறியது.
இத்தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி, இதுவரை சுமார் 11,35,104 பேர் விண்ணப்பித்து இருந்தனர். வருகிற மே 7ஆம் தேதி நடக்கவிருக்கிற நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (31.03.2017) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று சில மாணவர்கள் சமீபத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று (31.03.2017) விசாரித்த உச்சநீதிமன்றம், காலக்கெடுவை நீட்டித்து வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என அறிவுறுத்திய சி.பி.எஸ்.இ.யின் உத்தரவும் செல்லாது என அறிவித்துள்ளது. இதனால், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் இத்தேர்வில் பங்கேற்க முடியும் எனும் சூழல் உருவாகியுள்ளது.