மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இலவச ஒதுக்கீடு! -ஆன்லைன் சிரமத்துக்கு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் பதில்


கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
     கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வேலைகளில் தமிழக அரசு தீவிர காட்டத் தொடங்கியுள்ளது. ' ஏழை, எளிய குழந்தைகளுக்குத் திட்டத்தின் பலன் முழுமையாகச் சென்று சேரும் அளவுக்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறோம்' என்கிறார் பள்ளிக் கல்வித்துறை செயலர்
உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.


மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதனால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசே ஏற்றுக் கொண்டது. ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சட்டம் பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகள் எல்லாம், 'இந்த ஒதுக்கீட்டின்படி மாணவர்களைச் சேர்த்துவிட்டோம்' என்றுகூறி, அரசின் நிதியைப் பெற்று வந்தன. கடந்த ஆண்டு மட்டும் இந்த வகையில் 100 கோடி ரூபாய் வரையில் கணக்கு காட்டப்பட்டது. ' இவற்றுக்கான கணக்குகள் அனைத்தும் போலியானவை' என பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சுமத்தினர். " மாணவர் சேர்க்கையின்போது, பல்லாயிரம் ரூபாய்களைத் தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்த்துக் கொண்டதாக பொய்க் கணக்கு எழுதுகின்றனர். இதனைத் தட்டிக் கேட்கும் பெற்றோரின் குழந்தைகள் பழிவாங்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளின் லாப வேட்டையை கல்வி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை" என ஆதங்கத்தோடு தொடங்கினார் பெற்றோர் ஒருவர், தொடர்ந்து நம்மிடம் பேசியவர்.

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்"இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றார். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்வதற்காக, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளார். இந்தத் தளத்தில் உள்ள சிறு குறைபாடுகள் களையப்பட்டால் மிகுந்த உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தின்படி www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதில், 'பெற்றோரின் வருமான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக தாலுகா அலுவலகங்களில் பெற்றோர் கூட்டம் நிரம்பி வழிகிறது. மாறாக, 'மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கின்போது வருமான சான்றிதழைக் காட்டினால் போதும்' எனக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.

அடுத்ததாக, 'ஆதரவற்றோர் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களை எப்படி வகைப்படுத்துகின்றனர் என்பதும் தெரியவில்லை. இதைவிடக் கொடுமை, 'மே 18-ம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என அதிகாரிகள் கூறியுள்ளனர். இ-சேவை மையங்கள், மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்கின்றனர். பல உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் கணினி ஆபரேட்டர்களே இல்லை. 'தனியார் பள்ளிகளும் இந்தப் பணியை மேற்கொள்ளலாம்' என உத்தரவிட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். உதயசந்திரன் காலத்திலாவது 25 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படும் என நம்புகிறோம்" என்றார் நிதானமாக.


பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரனிடம் பேசினோம். "இணையத்தள பதிவேற்றத்தில் உள்ள சிரமங்களைக் களைவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். நீங்கள் குறிப்பிடும் கேட்டகிரியைப் பற்றியும் ஹோம் பேஜில் குறிப்பிடுகிறோம். கடந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதில், ஏதேனும் குளறுபடிகள் நடந்துள்ளதா என்பது குறித்து புகார் கடிதம் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு ஆண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்காக குழுக்கள் அமைக்கப்பட இருக்கின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வருவாய்த்துறை அலுவலர்களையும் அழைக்க இருக்கிறோம். இந்தக் குழுக்களின் கூட்டத்தில் பெற்றோரும் கலந்து கொள்ளலாம். 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் குழந்தைகளை தனியார் பள்ளிகள் அவமானப்படுத்துவது போன்ற நிகழ்வுகள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் உறுதியாக.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)