பாரத ஸ்டேட் வங்கியில் 2,800 பேர் விருப்ப ஓய்வு !!
பாரத ஸ்டேட் வங்கியில் 2,800 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் ஜெய்ப்பூர், ஸ்டேட்
பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
இதனால் வங்கியின் நிர்வாகி கிளைகளும் ஒன்றிணைக்கப்டுவதால் ஊழியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்கள் வங்கி இணைப்புக்கு பிறகு மற்ற கிளைகளில் பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என பாரத ஸ்டேட் வங்கி வட்டாரங்கள் கூறியிருந்தன.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மும்பையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட துணை வங்கிகளை சேர்ந்த ஊழியர்களில் 2,800 பேர் மட்டும் விருப்பு ஓய்வு திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த திட்டம் ஏப்ரல் 5ம் தேதி வரை அமலில் இருக்கும். ஐந்து துணை வங்கிகளில் உள்ள சுமார் 12,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற தகுதி உள்ளவர்கள் என்றார்.
ஒரு ஊழியர் தொடர்ந்து 20 ஆண்டுக்கு மேல் பணியாற்றியிருந்து 55 வயதை எட்டியிருந்தால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம். பாரத ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பிறகு இதன் ஊழியர் எண்ணிக்கை 2,70,011 ஆகியுள்ளது. இதில் இதன் துணை வங்கிகளில் இருந்து வந்த 69,191 பேரும் அடங்குவர். குறைந்த பட்ச இருப்பு தொகை குறித்து மற்றொரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ள அருந்ததி பட்டாச்சார்யா, குறைந்த பட்ச இருப்பு விதிகளில் மாற்றம் செய்யப்படவில்லை.இது சராசரி இருப்பு அளவாக கொள்ளப்படும். மெட்ரோ நகரங்களில் மாதாந்திர சராசரி இருப்பு ரூ.5,000 இருக்க வேண்டும். 3 நாட்களுக்கு ரூ.15,000 இருப்பு வைத்திருந்து, 2 நாட்கள் இருப்பு எதுவும் இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படாது என்றார்.
பாரத ஸ்டேட் வங்கி கடன் வட்டி விகிதத்தை 9.25 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்த வங்கி அறிவித்துள்ளது.