பிளஸ் 2 தேர்வில் 'கிரேஸ்' மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு
தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், 1௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்தோ, கடினமாகவோ, கேள்விகள் இடம் பெற்றால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்.
அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் கேரளா, ஆந்திரா மாநில பாடத்திட்டங்களில், போனஸ் மதிப்பெண் என்ற, 'மாடரேட்' முறை பின்பற்றப்படுகிறது. இதில், சில மாணவர்களுக்கு, ௧5 சதவீதம் வரை மதிப்பெண்ணை அதிகரித்து, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாநிலங்கள் தோறும் மதிப்பிடும் முறை மாறுவதால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், 'கிரேஸ் மார்க்' என்ற கருணை மதிப்பெண் முறையை, இந்த ஆண்டே நீக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளின் கூட்டம், டில்லியில், சமீபத்தில் நடந்தது.
அதில், கருணை மதிப்பெண் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு, தமிழகம் உட்பட, 32 பாட வாரியங்கள், ஒப்புதல் தெரிவித்துள்ளன.
பள்ளி கல்வி சொல்வது என்ன? : இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில், பொதுவாக போனஸ் மதிப்பெண், கருணை மதிப்பெண் போடும் முறை இல்லை. விடைத்தாள் திருத்தம் பல கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது,'' என்றார்.
சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினரும், பவன்ஸ் ராஜாஜி பள்ளி முதல்வருமான, அஜீத் பிரசாத் ஜெயின் கூறுகையில், ''பல மாநிலங்களில், அதிகப்படியான மதிப்பெண்கள் வழங்குவதால், அந்த மாநில மாணவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் கூடி, மற்ற மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது,'' என்றார்.