பழைய வாகனத்தை பி.எஸ்., - 4க்கு மாற்ற முடியுமா?
'மோட்டார் பைக் மற்றும் சில குறிப்பிட்ட பெட்ரோலில் இயங்கும் கார்களில், பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தில் இருந்து பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடியும் என்றாலும்,
அதை மாற்றுவதற்கு ஆகும் செலவில், புதிய வாகனத்தையே தயாரித்து விடலாம்' என, ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய காரணிகளில், வாகனங்கள் கக்கும் புகையே முக்கியமானதாக உள்ளது. இதை குறைக்கும் வகையில், பி.எஸ்., எனப்படும் பாரத் ஸ்டேஜ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, 'பி.எஸ்., - 4 தரமுள்ள இன்ஜின்களுடன் கூடிய வாகனங்களை மட்டுமே, 2017, ஏப்., 1 முதல் விற்க வேண்டும்; பதிவு செய்ய வேண்டும்' என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதை, 2016, டிசம்பரில் அளித்த தீர்ப்பிலும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்திருந்தது.இந்த நிலையில், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் மறுத்தது.
அதனால் தான், மோட்டார் பைக் தயாரிப்பாளர்கள், தங்களிடம் உள்ள, பி.எஸ்., - 3 வாகனங்களுக்கு, கிட்டத்தட்ட, 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்தன. பெட்ரோலில் இயங்கும் கார் தயாரிப்பாளர்கள், ஏற்கனவே, பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டனர். அதேபோல் தான், மற்ற வாகனத் தயாரிப்பாளர்களும் ஏற்கனவே, பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தை நிறுத்திவிட்டு, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளனர். அவ்வாறு விற்காமல் உள்ள வாகனங்களில் கூட, சில குறிப்பிட்ட கார்களில், பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தில் இருந்து, பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், கனரக வாகனங்கள், வர்த்தக வாகனங்களை மாற்று வதற்கு வாய்ப்பே இல்லை.