தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி: அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த தள்ளுபடி ஆணையானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டும் அல்லாது ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பின் தலைவரான அய்யாக்கண்ணு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பளித்தது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லியில் போராட்டத்த்தில் ஈடுபட்டிருக்கும் அய்யாக்கண்ணு இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பொழுது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.