சிறந்த இன்ஜி., கல்லூரி: சென்னை ஐ.ஐ.டி., 'டாப்'
இந்திய கல்வி நிறுவனங்களுக்கான, 2017ம் ஆண்டுக்கான தரவரிசையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
இதில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான தரவரிசையில், சென்னை, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையம் முதலிடத்திலும், ஒட்டுமொத்த சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
சிறந்த கல்லுாரிகள் பட்டியலில், சென்னை லயோலா கல்லுாரி, நாட்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை, இரண்டாவது ஆண்டாக, நேற்று வெளியிட்டது.
இன்ஜி., கல்லுாரிகள்: சிறந்த இன்ஜி., கல்லுாரிகளுக்கான பட்டியலில், சென்னை, ஐ.ஐ.டி., நாட்டில் முதலிடத்தில் உள்ளது. மும்பை, கரக்பூர், புதுடில்லி, கான்பூர், ரூர்கேலா, குவஹாத்தி, ஐ.ஐ.டி.,க்கள் அடுத்த இடங்களில் உள்ளன. சென்னை அண்ணா பல்கலை, எட்டாவது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள்: இந்த பட்டியலில், பெங்களூரு இந்திய அறிவியல் மையம் முதலிடத்தில் உள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மும்பை, கரக்பூர், புதுடில்லி, ஐ.ஐ.டி.,க்கள் அதற்கடுத்த இடங்களில் உள்ளன. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை, ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. அண்ணா பல்கலை, 13வது இடத்தில் உள்ளது.
சிறந்த பல்கலை: இதிலும், பெங்களூரு இந்திய அறிவியல் மையம் முதலிடத்தில் உள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வாரணாசியில் உள்ள, பனாரஸ் ஹிந்து பல்கலை, மூன்றாவது இடத்தையும், சென்னை அண்ணா பல்கலை, ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன. கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம், ஒன்பதாவது, வேலுார், வி.ஐ.டி., 14வது இடத்திலும், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, 17வது இடத்திலும் உள்ளன.
சிறந்த கல்லுாரிகள்: இதில், பிரபல கல்லுாரிகளை பின்தள்ளிவிட்டு, டில்லியைச் சேர்ந்த, மிரண்டா ஹவுஸ் முதலிடத்தை பிடித்தது. சென்னை லயோலா கல்லுாரி, இரண்டாவது இடத்தையும், திருச்சி பிஷப் ஹுபர் கல்லுாரி, நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லுாரி, 10வது இடத்திலும், கோவை, பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 11வது இடத்திலும், சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லுாரி, 12வது இடத்திலும் உள்ளன.
நிர்வாகவியல்: சிறந்த நிர்வாகவியல் கல்லுாரிகள் பட்டியலில், குஜராத்தின் ஆமதாபாத் நிர்வாகவியல் மையம் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு, கோல்கட்டா, லக்னோ, கோழிக்கோடு, ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய நிர்வாகவியல் மையங்கள் அதற்கடுத்த இடங்களில் உள்ளன. திருச்சி, ஐ.ஐ.எம்., 13வது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும், 20 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே, இந்த தரவரிசை அளிக்கப்படுகிறது. கல்வி நிறுவனத்தின் தரம் குறித்து அறிந்து, முடிவெடுப்பதற்கு, இந்த பட்டியல், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.