பள்ளியில் இருந்து வரும் குழந்தையிடம் என்ன கேட்கலாம்?...என்ன கேட்கக்கூடாது?
பள்ளிவிட்டு வரும் குழந்தைகளிடம் நாம் பேசும் விதத்தில்தான் அவர்களின் படிப்பு ஆர்வம்,
பள்ளியில் அவர்களுக்கு இருக்கும் நிறைகுறைகளைத் தெரிந்துகொள்ள முடியும். குழந்தைகளின் அன்றைய மீதி நேரத்தையும் உ
ற்சாகமாக மாற்ற முடியும். அதற்கு எப்படியெல்லாம் பேசலாம், என்னவெல்லாம் கேட்கலாம் என விளக்குகிறார், மதுரையைச் சேர்ந்த மனோதத்துவ
நிபுணர், காயத்ரி அருண்.
குழந்தை
* உங்கள் குழந்தைப் படிப்பில் அதிகம் ஆர்வமுள்ளவரா... அல்லது நடனம், பாட்டு, விளையாட்டு போன்றத் துறைகளில் ஆர்வமுள்ளவரா என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களில் இருந்து பேச்சைத் தொடங்குங்கள்.
* உங்கள் குழந்தைப் படிப்பில் சுட்டி என்றால், 'இன்றைக்கு கிளாஸ் எப்படிப் போச்சு?' எனப் பேச்சைத் தொடங்கலாம். பிறகு, பிடிச்ச சப்ஜெக்ட் பற்றியும், அந்த சப்ஜெக்ட் எடுத்தபோது நடந்த விஷயங்கள் பற்றியும், குழந்தைப் பெற்ற பாராட்டுப் பற்றியும் கேட்கலாம். எடுத்துக்காட்டாக... குழந்தைக்குக் கணக்குப் பாடம் பிடிக்கும் என்றால், அன்றைக்கு எந்தப் பகுதி நடத்தினார்கள்? எவ்வளவு நேரத்தில் குழந்தை சால்வ் செய்தது, ஆசிரியர் என்ன சொன்னார் எனக் கேட்க வேண்டும்.
* படிப்பைவிட உங்கள் குழந்தை விளையாட்டில் கில்லி என்றால், அன்றைக்கான கேம்ஸ் வகுப்பு எப்படிச் சென்றது என்பது போன்ற சுவாரஸ்ய சம்பவங்களை பேசவைக்கலாம். குழந்தை விளையாடும்போது அடிபட்டு வந்திருந்தால், 'இதுக்குத்தான் விளையாட்டே வேண்டாம்னு சொன்னேன்' என்று கோபப்படாமல், 'அடுத்த முறை காயம் ஏற்படாமல் விளையாடு' என உற்சாகமூட்டி மருந்து போடுங்கள். தாழ்த்தி பேசத் தொடங்கினால், பெரிய அளவில் பட்ட காயங்களைக்கூட மறைத்துவிடுவார்கள். அது பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
குழந்தை
* பெற்றோராக இருந்து குழந்தைகளை வளர்ப்பது பெரிய கலை. தினம், தினம் குழந்தைகளின் இயல்பு மற்றும் வயதுக்கேற்ப நம்மை தகுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு நடனம், ஸ்விம்மிங், பாட்டு போன்ற சிறப்பு வகுப்புகள் இருந்தால், அதில் இருக்கும் சுவாரஸ்யமான விஷாய்ங்களைத் தெரிந்துகொண்டு ஆலோசனை வழங்கலாம்.
* குழந்தைக்குப் பிடித்த, ஈடுபாடுள்ள கேரிகுலர் வகுப்பில் மட்டுமே சேர்க்க வேண்டும். பெற்றோரின் விருப்பத்துக்காகச் சேரும் குழந்தைகளுக்கு, அதில் ஈடுபாடு இருக்காது. அதனால், அந்த வகுப்பில் சாதனை செய்ய இயலாமல், அந்தச் சூழலே மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
* நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால், அந்தந்த நாளில் பணியிடத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளைச் குழந்தைகளின் வயதுக்கேற்ப பகிர்ந்துகொள்ளுங்கள். குடும்பத் தலைவியாக இருந்தாலும் வீட்டில் நடந்ததைச் சொல்லுங்கள். குழந்தைகள் அவர்களிடம் இருக்கும் பள்ளி நிகழ்வுகளைச் சொல்வார்கள். இதன் மூலம், குழந்தைகளின் நட்பு வட்டம், சூழலைப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
* அலுவலகத்தில் நீங்கள் சந்தித்த சவால்களைச் சொல்லி, அதனை எவ்வாறு தீர்க்கலாம் என்ற ஆலோசனையைக் கேளுங்கள். இதன் மூலம், அவர்களைப் பெரிய மனிதர்களாக நீங்களும் மதிக்கிறார்கள் என மகிழ்வார்கள். புதுப் புது விஷயங்களை உங்கள் மூலம் கற்றுக்கொள்வார்கள். அவர்கள் உங்களின் பணிப் பிரச்னைகளைப் புரிந்து நடப்பார்கள்.
* 'லன்ச் உனக்குப் பிடித்திருந்ததா? எல்லோரோடும் ஷேர் பண்ணி சாப்பிட்டீங்களா? டைம்க்குள்ளே சாப்பிட முடிந்ததா? மற்றவர்கள் உன்னிடம் என்ன சாப்பாட்டை ஷேர் செய்தார்கள்?' எனக் கேளுங்கள். இதன் மூலம், உங்கள் குழந்தை எத்தகைய குழந்தைகளுடன் பழகுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ப அறிவுரைகளை வழங்கலாம். யாருடனும் ஷேர் செய்யாமல் தனித்துச் சாப்பிட்டால், மற்றவர்களிடம் பழகச் சொல்லுங்கள்.
* குழந்தைகளுக்கு பிரேக் டைம் என்பது மிகவும் முக்கியத்துவம். குழந்தைகள் விரைவாகச் சாப்பிட்டுவிட்டு விளையாட நினைப்பார்கள். அந்தச் சமயத்தில் என்ன விளையாட்டு விளையாட விரும்புகிறார்கள்? தங்களைவிடப் பெரிய வகுப்பு குழந்தைகளால் என்ன மாதிரியான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்? எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகள் மூலம் ஆலோசனை வழங்குங்கள். இது, எதிர்காலத்தில் சமூகத்தை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
* சில பள்ளிகளில் மதிய உணவை (டே போர்டிங்) அங்கேயே வழங்குவர். அந்த உணவு அவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அது ஏன் பிடிக்கவில்லை? தரமாக இல்லையா எனத் தெரிந்துகொள்ளுங்கள். தரமாக இருந்தும் சாப்பிடவில்லை என்றால், 'சில சாப்பாடுகளை ஆரோக்கியத்துக்காக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நண்பர்களோடு சேர்ந்து உண்ணும் சந்தோஷம் கிடைக்கும்' எனச் சொல்ல வேண்டும்.
* குழந்தைகள் மூன்றாம் வகுப்பில் இருந்தாவது, பெற்றோர் துணையின்றி வீட்டுப் பாடங்களை செய்ய வேண்டும். 'நான் சொல்லித் தருகிறேன்' என எப்போதும் தயாராக இருக்காதீர்கள். இதன் மூலம், அனைத்தையும் அம்மாவிடம் அல்லது அப்பாவிடம் கேட்டு படித்துவிடலாம் என்ற மனநிலைக்குக் குழந்தைகள் வந்துவிடுவார்கள். புரியவில்லை என்றால், ஆசிரியரிடமோ, நண்பர்களிடமோ மீண்டும் கேட்க சொல்லுங்கள். அதையும் தாண்டி புரியவில்லை என்கிறபோது சொல்லிக்கொடுங்கள்.
* குழந்தைகளில் இன்ட்ரோவெட், எக்ஸ்ட்ரோவெட் என இரண்டு விதமாக இருப்பார்கள். எல்லோருமே திறமையான குழந்தைகளே. இன்ட்ரோவெட் குழந்தைகள், குறைவாகப் பேசுவார்கள். குறுகிய நட்பு வட்டத்தில் இருப்பார்கள். இவர்களை, மற்றவர்களிடம் பழகச் சொல்லிப் பாருங்கள். விருப்பம் இல்லையென்றால் அவர்கள் இயல்பிலேயே இருக்கவிடுங்கள். ஒட்டுமொத்த நடவடிக்கையையும் மாற்ற நினைத்து குழந்தைகளை மன அழுத்தத்துக்கு உள்ளாக்காதீர்கள்.