முன்பணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்தும் ‘பிரி-பெய்டு’ திட்டம்
கட்டண பாக்கியை ஒழிக்க புதிய முயற்சி: முன்பணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்தும் 'பிரி-பெய்டு' திட்டம்
| மின்கட்டண பாக்கியை ஒழிக்க முன்பணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்தும் 'பிரி-பெய்டு' திட்டத்தை மின்சார வாரியம் கொண்டுவருகிறது. மின்கட்டணத்தை கட்டாமல் இழுத்தடிப்பவர்களுக்காகவே ஒரு புதிய திட்டத்தை மின்வாரியம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. செல்போன் 'பிரி-பெய்டு சிம் கார்டுக்கு' பணத்தை முதலில் செலுத்தி, 'ரீசார்ஜ்' செய்து பயன்படுத்துவதுபோல, மின்கட்டணத்தையும் முன்பணமாக செலுத்தி, அந்த தொகைக்கு ஏற்ப மின்சாரத்தை பயன்படுத்தும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- இந்த பிரி-பெய்டு மின்சார மீட்டர் திட்டத்தை சென்னையில் தான் முதலில் அமல்படுத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 92 லட்சம் வீட்டு உபயோக மின் இணைப்புகளில், 80 லட்சம் வரையிலான இணைப்புகள் சென்னையில் தான் உள்ளன. பிரி-பெய்டு திட்டத்தின்படி மின்நுகர்வோர் முதலில் கட்டணத்தை செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். வீடுகளில் 'பிரி-பெய்டு மின்சார மீட்டர்'பொருத்துவதால், 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணமில்லை என்ற திட்டத்தில் எந்த பாதிப்பும் வராது.
அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மானிய தொகை, கியாஸ் சிலிண்டருக்கு மானியம் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதுபோல மின்கட்டண மானியமும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதேபோல 2014-ம் ஆண்டு மின்கட்டணம் உயர்த்தியபோது 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டண உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு அந்த சலுகை தொடர்ந்து கிடைக்கும். எனவே பயனாளிகளுக்கு இந்த புதிய திட்டத்தால் பாதிப்பு வராது. இந்த 'பிரி-பெய்டு மீட்டர்'களில் செய்யப்பட்டு இருக்கும் 'ரீசார்ஜ்' தொகை காலியாகும்போது, அந்த மீட்டரில் இருந்து 'அலாரம்' அடித்து எச்சரிக்கும். உடனே தடையில்லா மின்சாரம் பெற தேவையான தொகைக்கு 'ரீசார்ஜ்' செய்துகொள்ளலாம். அனைத்து மின்சார அலுவலகங்களில் ரூ.100, ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ,500 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளிலும் 'பிரி-பெய்டு கூப்பன்கள்' கிடைக்கும். இதனை மக்கள் வாங்கி பயனடையலாம். மின்கட்டண பாக்கி வைப்பவர்கள், உரிய காலத்தில் செலுத்தாதவர்களின் வழக்கமான டிஜிட்டல் மின்மீட்டர்கள் அகற்றப்பட்டு இந்த பிரி-பெய்டு மீட்டர்கள் பொருத்தப்படும். அவர்கள் தேவையான கட்டணத்துக்கு ரீசார்ஜ் செய்துகொண்டு மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். மின்கட்டண பாக்கி வைத்துள்ள அரசு அலுவலகங்களும் மின்வாரியத்தில் பிரி-பெய்டு மின் மீட்டரை வாங்கி பொருத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் மின்வாரியத்திற்கு இழப்பு என்பது ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.