தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உரிய முறையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்-லைன் முறை பின்பற்றப்படுகிறது.
என்னென்ன இணைப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணம் 400 கே.பி.,க்கு மிகாமல் இருப்பது அவசியம்.
இதனை கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செய்வது சிரமம். இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்: அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஐந்து பள்ளிகள் வரை விருப்பம் தெரிவிக்கலாம்.
எனவே, இணைய சேவை மையத்துக்குச் சென்று பள்ளிகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவது சிரமத்தைத் தவிர்க்கும்.
இ-சேவை மையங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் அங்கேயே ஸ்கேன் செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும், அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது நாம் சரியான முறையில் தகவல்களைத் தெரிவித்து அவை உரிய வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.