செயல்படாத ஊழியர்களை நீக்கும் ரயில்வே துறை!
செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கி, அவர்களை பணியிலிருந்து நீக்க ரயில்வே துறை முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஏற்கனவே இதுபோன்று இரண்டு மூன்று வழக்குகளில் செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் ஊழியர்களின்
செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் பணி தொடரும். ரயில்வே துறையில் மேம்பாடு மற்றும் சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இதுபோன்ற செயல்படாத ஊழியர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர். மேலும் ஒழுங்கின்மை மற்றும் பணியில் நேர்மையின்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்’ என்றார்.
செயல்படாத ஊழியர்களை நீக்குவதன்மூலம் தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று, ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத காரணத்தால் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.