ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்
ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் : கோடை விடுமுறையில் கல்வித்துறை ஏற்பாடு
ஆதார் அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்ககத்தின்கீழ் 2016-17ம் கல்வியாண்டில் உயர், மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணியை 100 சதவீதம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை பதிவு செய்யப்படாத மாணவர்களுக்காக 2017 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வட்ட அளவில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது சார்பாக தாலுகா அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த விபரத்தை தெரிவித்து ஆதார் அட்டை பதிவு முகாமை பயன்படுத்திக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும். 100 சதவீத ஆதார் பதிவை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.