விண்வெளித் துறையில் கால் பதிக்கும் பெல் !!
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிறுவனமான பெல் (Bharat Heavy Electricals), விண்வெளித் துறையில் கால் பதிக்க முடிவுசெய்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெல் நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புடன் (ISRO) இணைந்து செயற்கைக்கோள்கள் இயக்கத்துக்கான சோலார் தகடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் விமான இயந்திரங்களை
பழுதுபார்க்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளில் ஈட்டுபடவும் முடிவு செய்துள்ளது.
மின்சார உற்பத்தி நிறுவனமான பெல், தனது சேவையை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக மின்சார பேருந்துகள், மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார கார்கள் மற்றும் மின்சாரப் படகுகள் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.
செயற்கைக்கோள்களுக்கு சோலார் தகடுகள் அமைக்கும் பணிகள் குறித்து பெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘செயற்கைக்கோள்களுக்கு சோலார் தகடுகளை அமைப்பதற்காக இஸ்ரோவுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் செயற்கைக்கோள்கள் ஏவும் பணிகளில் இயங்கவும் இஸ்ரோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். விமான இன்ஜின்களை பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்.
தற்போதைய நிலையில், இந்திய மின்சார உற்பத்தி ஒரு நிலையற்றதன்மையில் உள்ளது. மேலும் வருகிற 2026ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்திசெய்ய, மின் உற்பத்திக்குத் தேவையான பல்வேறு மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தச் சூழலில், விண்வெளித் துறையில் நுழையும் பெல் நிறுவனத்துக்கு மிகவும் சவாலான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.