The Great Education - Book "Pagal Kanavu"

புத்தகத்தால் என்ன பயன்? நேரம்தான் விரயம் ஆகிறது என அதன் அருமை தெரியாதவர்கள் புலம்புகிறார்கள். ஆனால், சரியான ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும்! அதிலும் குறிப்பாக ஆசிரியர் ஒருவர் கைக்கு செல்லும் புத்தகம் அவருக்குப் பிடித்த
மானதாக இருந்துவிட்டால், எத்தனையோ மாணவர்களுக்கு அது தூண்டுகோலாக அமைந்துவிடும்.
இப்படியோர் அனுபவத்தை நான் நேரடியாகவே அறிந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பரான அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்குப் பிறந்த நாள் பரிசாக, ‘பகல் கனவு’ என்ற ‘ஜிஜுபாய் பதேக்கா’ எழுதிய புத்தகத்தைக் கொடுத்தேன்.
ஒரு வார காலத்துக்குப் பிறகு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ‘’இதுபோன்ற புத்தகத்தை நான் வாசித்ததே இல்லை. இத்தனை வருஷமாக நானும் ஓர் ஆசிரிய ராக வாழ்ந்திருக்கிறேன். ஆனால், மாணவர்களிடம் இப்படிப் பயிற்று விக்கும்முறை எதையும் செய்து பார்க்கவில்லையே என குற்றவுணர்ச் சியை இந்தப் புத்தகம் ஏற்படுத்திவிட்டது. என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள இந்தப் புத்தகம் உதவியது. நிச்சயம் நானும் ‘ஜிஜுபாய் பதேக்கா’ வைப் போல செயல்படுவேன்’’ என்றார்.
அவர் சொன்னதை நிஜமாக்குவதைப் போல இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கூரியரில் ஒரு பார்சலை அவர் அனுப்பியிருந்தார். திறந்து பார்த் தேன். அத்தனையும் அவருடைய மாணவர்கள் எழுதிய கதைகள். ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆளுக்கு ஒரு கதையை ஒரு பக்க அளவில் எழுதியிருந்தார்கள். மாணவர்களின் கையெழுத்தில் அந்தக் கதைகளை வாசித்தபோது சிலிர்த்துப் போனேன்.
ஒரு மாணவன், சைக்கிளின் டயர் அழுத்திப் போன மைதானத்து புல்லின் வலியை ஒரு கதையாக எழுதி யிருந்தான். ஒரு மாணவி, பறக்க ஆசைப்பட்ட தவளையைப் பற்றி ஒரு கதை எழுதியிருந்தாள். இன்னொரு மாணவன், உடல் இளைப்பதற்காக ஒரு யானை எப்படி சாப்பிடாமல் கிடக்கிறது என்பதைப் பற்றி எழுதியிருந்தான். சின்னஞ்சிறார்களின் மனதில்தான் எத்தனை வளமான கற்பனைகள்!
அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினேன். சந்தோஷமாக தனது அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார்.
‘‘இப்போதெல்லாம் நான் வகுப்பறை களில் கதைகள் சொல்கிறேன். படித்த புத்தகங்களை மாணவர்களுக்கு அறி முகம் செய்கிறேன். வாரம் ஒருநாள் வனஉலா அழைத்துப் போய் தாவரங்களை, பறவைகளை அடை யாளம் காட்டுகிறேன். எளிய அறிவியல் சோதனைகளை கூட்டாக செய்து விளையாடுகிறோம்.
ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு நோட்டு வாங்கிக் கொடுத்து, அவன் எதை எழுத விரும்பினாலும் அதில் எழுதச் சொல்லியிருக்கிறேன். நிறைய மாணவர்கள் ஆர்வமாக தான் படித்த, கேட்ட, பாதித்த விஷயங்களை நோட்டில் எழுதிவந்து காட்டுகிறார்கள். அதை பாராட்டும்போது அவர்கள் அடையும் சந்தோஷம் அளவில்லாதது. ஆசிரியர் என்பவர் வெறும் பாடம் நடத்தும் மனித ரில்லை; அது மகத்தான உறவு என்பதை உணர்ந்து கொண்டேன்’’ என்றார்.
இதுதான் நண்பர்களே ஒரு புத்தகம் ஆசிரியர் மனதில் உருவாக்கும் மகத் தான மாற்றம்!
பலநூறு ஆசிரியர் மனதில் இப்படியான மாற்றத்தை எளிதாக உரு வாக்கிய புத்தகமே பகல் கனவு. இது ஓர் ஆசிரியரின் சுய அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டது.
‘ஜிஜுபாய் பதேக்கா’ குஜராத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்தவர். தனது பள்ளியில் ‘மாண்டிசோரி’ கல்வி முறையை அறிமுகப்படுத்தி, பதேக்கா மேற்கொண்ட முயற்சிகளையே இந்தப் புத்தகம் விவரிக்கிறது. 1931-ம் ஆண்டு குஜராத்தியில் எழுதப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பகல் கனவு’ புத்தகம், இன்றும் கல்விகுறித்த சிறந்த புத்தகங்களில் ஒன்றாக கொண்டாடப் படுகிறது.
பயமே இல்லாத வகுப்பறையே மாணவனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாக பள்ளிக்கு வரும் குழந்தை ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனுமே எப்போதும் இருக்கும். அதுவே கற்றலுக்கான முதல் தடை. இயற்கைக் கல்வி முறையில் சுதந்திரமாக செயல்பட அனு மதிக்கப்படும் குழந்தைகள், தாங்கள் விரும்பும் விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் கற்றல் இனிமையான அனுபவமாக அங்கே மாறுகிறது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ‘ஜிஜுபாய் பதேக்கா’ கல்வியில் புதிய மாற்றங்களை உருவாக்க ஆசை கொண்டிருந்தார். பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து மதிப் பெண் வாங்குவது முக்கியமா? அல்லது ஆளுமையை உருவாக்கி அதன் மூலம் மாணவனை வெற்றி பெறச் செய்வது முக்கியமா என்ற கேள்வி, அவரது மனதில் தீவிரமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.
‘முழுமையான புரிதல் இன்றி மனப்பாடம் செய்து ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற்றால், அவன் எப்படி சிறந்தவனாக இருக்க முடியும்? கட்டாயத்தின் பேரால் ஒன்றை படிப்பதை விடவும், புதிய முறையைக் கையாண்டு எளிதாக புரிந்து படிக்கும் வகையில் கற்று தந்தால் என்ன’ என பதேக்கா யோசனை செய்தார். அதன் விளைவாக மாணவர்களுக்கு கதைகள் வழியாகவே பாடங்களைக் கற்றுத் தர முடிவு எடுத்தார்.
ஆரம்ப நாட்களில் மாணவர்களும் ஆர்வமாக கதை கேட்பதும், சொல்வது மாக இருந்தார்கள். ஆனால் பாடங்களை, உண்மைகளை கதையோடு சேர்த்து சொல்லும்போது பாடங்களை விரும் பாமல் வெறும் கதையை மட்டும் கேட்கத் தொடங்கினார்கள்.
‘இது தவறான வழிகாட்டுதல். உண் மையை மாணவர்கள் உணரும்படி சொல்வதற்குத்தான் கதையைப் பயன் படுத்த வேண்டும்’ என உணர்ந்த பதேக்கா, புதிய வழிமுறையை உரு வாக்கப் போராடினார். இவரது இந்த முயற்சியை சக ஆசிரியர்கள் கேலி செய்தார்கள். பள்ளி நிர்வாகம் அவரை கண்டித்தது. ஆனாலும் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை. முடிவில் வெற்றி பெற்றார். இந்த அனுபவத்தை அடைவதற்கு அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அதன் வெற்றி, தோல்விகளே இந்த ‘பகல் கனவு’ புத்தகத்தில் விவரிக்கபட்டுள்ளன.
‘ஜிஜுபாய் பதேக்கா’ கையாண்டது ‘மாண்டிசோரி’ கல்விமுறை. இந்த முறை 1907-ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மாண்டிசோரி அம்மையாரால் வகுக்கப் பட்டது. மாண்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், கண்காணிக்கவும் மட்டுமே ஆசிரி யர்கள் இருப்பார்கள். இந்தப் பள்ளிகளில் பலவகைப் பயிற்சிக் கருவிகள் மூலம் கல்வி கற்றுத் தரப்படும். இவை கண்ணைக் கவரும் விளையாட்டுப் பொருள் போல பல்வேறு வண்ணங்களில் இருக்கும். இந்தக் கருவிகளை எளிதாகக் கையாண்டு குழந்தைகள் ஆர்வமாக கற்றுக்கொள்கி றார்கள்.
மருத்துவரான மரியா மாண்டிசோரி 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றியுள்ளார். குழந்தைகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து செயல்படுவதே இந்தக் கல்விமுறையின் சிறப்பு அம்சம். குழந்தைகளிடம் அபாரமான சக்தி இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்தி அவர்களது ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுவதே கல்வியின் நோக்கம் என்கிறார் மாண்டிசோரி.
80 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜிஜுபாய் பதேக்கா’ ஓர் ஆசிரியராக தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக் கொண்டார். அதில் அவர் வெற்றியும் கண்டார். இந்த நெருப்பு பந்தத்தை உயர்த்திப் பிடித்து நடக்கும் ஆசிரியர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பதே நம் காலத்தின் ஆதங்கம்!

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)