TNTET -ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற வேண்டியகட்டாயத்தில் 300 ஆசிரியர்கள்.
ஒரே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை பெற்ற 3,200 பேரில், 300 பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2011 டிசம்பரில் 3,200 பேருக்கு, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமனஆணை வழங்கப்பட்டது. இதற்காக 2011 மே மாதம் 2,900 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், அதே ஆண்டு நவம்பரில் 300 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. மே மாதம் நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பில் பங்கேற்ற 2,900 பேருக்கு, பணி வரன் முறை மற்றும் தகுதி காண் பருவம் முடிக்கப்பட்டு, நிரந்தரப் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.ஆனால், நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 300 பேருக்கு இதுவரை பணி வரன் முறையும், தகுதி காண் பருவமும் வழங்கப்பட வில்லை. 2010-க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டதால் 3,200-இல்,300 பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பணி நியமன ஆணை பெற்ற போதிலும், அதில் 2,900 பேருக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள300 பேர் பணி வரன் முறை, தகுதிக் காண் பருவம் பெற, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த 300 பேரும், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின், வரும் ஏப்ரல் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த 300 பேரும், முன்னுரிமை அடிப்படையில் (அதாவது மாற்றுத்திறனாளிகள், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள், முன்னாள் ராணுவத்தினர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், அருந்ததியினர்) பணி வாய்ப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சலுகைகள் இல்லை: தகுதிக் காண் பருவம் பெறாததால், தற்செயல் விடுப்பைத் தவிர, ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, பொங்கல் போனஸ், மருத்துவ விடுப்பு போன்ற அரசின் பயன்களை பெற முடியாத நிலையில் 300 ஆசிரியர்களும் உள்ளனர். தற்போது 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதாலும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய நிலை இருப்பதாலும், தகுதித் தேர்வுக்குதயாராவதில் சிரமம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது: ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு என்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனால், சமமான கல்வித் தகுதியுடன் ஒரே நேரத்தில் பணி வாய்ப்பு பெற்ற போதிலும், முன்னுரிமை அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ஏன்? கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சமம் என்னும் போது, அதை கற்பிக்கும் ஆசிரியர்களிடையே இதுபோன்ற பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா? 2010-இல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் மட்டும் சமார் 18,000 ஆசிரியர்கள் சிறுபான்மையினர் பள்ளிகள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர் என்றார்.