10ம் வகுப்பு தேர்வு: நாளை 'ரிசல்ட்'
தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. இதிலும், 'ரேங்க்' பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மார்ச், 8 முதல், 30 வரை, 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியாகின்றன.
தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு, மதிப்பெண்ணை பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவு வெளியான சில நிமிடங்களில், மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்., ஆக வரும்.
மாவட்ட கலெக்டர் அலுவலக, தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில், தேர்வு முடிவுகளை கட்டணமின்றி பார்க்கலாம். மதிப்பெண் சான்றிதழ்
தேர்வு எழுதியவர்கள், தேர்வுத் துறையின், http://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில், வரும், 25ம் தேதி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். பள்ளிகளிலும் அதே நாளில் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும்.
மறுகூட்டல் விண்ணப்பம் : தேர்வு முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, நாளை முதல், மே, 22 மாலை, 5:45 மணி வரை, மாணவர்கள், தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்களிலும் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பெறாதோருக்கு சிறப்பு துணை தேர்வு, ஜூன் இறுதியில் நடக்கும்; அதற்கான தேதி, பின் அறிவிக்கப்படும்.
அறிவிப்பிலும் புதுமை
பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியதை அடுத்து, மொபைல் போன் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி மற்றும் இணையதள முகவரியை, எஸ்.எம்.எஸ்., ஆக, நேற்று முதல் அனுப்பி வருகின்றன.