தமிழகத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்: 44 கல்லூரிகளில் 50 சதவீதம் வரை இடங்கள் குறைப்பு.
இந்தக் கல்வியாண்டில் (2017-18) தமிழகத்தில் முதல் கட்டமாக 11 பொறியியல் மூடப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், ஒரே ஒரு பொறியியல் கல்லூரி புதிதாக வருவதும் உறுதியாகியிருக்கிறது.
இதற்கிடையே, 44 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50 சதவீதம் வரை குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக நிகழாண்டும், பி.இ. இடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்கின்றனர் பேராசிரியர்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐடி), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) போன்ற பிரிவுகளின் மீது மாணவர் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
இந்தப் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேருவது அதிகரித்து வருகிறது. இதனால், பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடுவதும், மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) புள்ளி விவரங்களின்படி 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் 533-ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2016-17 கல்வியாண்டில் 527 ஆகக் குறைந்தது. மொத்த பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2.79 லட்சம் என்ற அளவில் இருந்தது.
11 கல்லூரிகள் மூடல்:
நிகழாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. 2017-18 கல்வியாண்டுக்கான அனுமதி நீட்டிப்பு நடைமுறைகளை ஏஐசிடிஇ இப்போது நிறைவு செய்துள்ளது.
இதில் நாடு முழுவதும் இருந்து 400 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்திலிருந்து மட்டும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்திருக்கின்றன.
இதில் 11 கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக அனுமதி நீட்டிப்புக்கே விண்ணப்பிக்காததால், முதல் கட்டமாக இந்த 11 கல்லூரிகளும் மூடப்படுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கல்லூரிகளின் எண்ணிக்கை 527 இல் இருந்து 510 ஆகக் குறைய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் பேராசிரியர்கள்.
44 கல்லூரிகளில் இடங்கள் குறைப்பு: அண்ணா பல்கலைக்கழகக் குழு, பொறியியல் கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வில், 44 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், முதல்வர், ஆய்வகம், நூலகம், வகுப்பறை, ஆகிய 5 காரணிகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் 44 கல்லூரிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அக்கல்லூரிகளில் 25 முதல் 50 சதவீதம் வரை இடங்களைக் குறைத்து அதிரடி நடவடிக்கையை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இதன் காரணமாக மொத்த இடங்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது என அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய கல்லூரி
தமிழகத்தில் புதிதாக ஒரு பொறியியல் கல்லூரியும் 3 கட்டுமானப் பொறியியல் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம் பெறப்பட்டு, பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிக்கு ஏஐசிடிஇ-யிடம் இருந்தும் அனுமதி கிடைத்துள்ளது. எனவே, புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கவது உறுதியாகியிருக்கிறது.
3 கட்டடவியல் பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை இந்திய கட்டுமானக் கவுன்சிலிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி கிடைத்ததும், 3 கட்டடவியல் பொறியியல் கல்லூரிகள் புதிதாகத் தொடங்குவதும் உறுதியாவிடும் என்று அண்ணா பொறியியல் கல்லூரி உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.