நாசா விஞ்ஞானி 12ம் வகுப்பில் எடுத்த மார்க் இவ்வளவுதான்!


நாசா விஞ்ஞானி ரிஃபாத்
  வேதியியலில் 89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள்.

நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே 750 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார் ரிஃபாத் ஷாரூக். தமிழர்களாகிய நாம் பொதுவாக, ஒருவர் பெற்ற மதிப்பெண்களை வைத்துத் தானே அவரது புத்திக்கூர்மையை, திறமையை எல்லாம் கணக்கிடுவோம். அதே வித்தையைப் பயன்படுத்தி ரிஃபாத் ஷாரூக் எந்தளவிற்கு திறமையானவர், புத்திக்கூர்மையுள்ளவர் என்பதைக் கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் மதிப்பெண்களை வைத்துக் கணக்கிடும் அவரது திறமையை விடப் பன்மடங்குத் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன அவரிடம். பிள்ளைகளின் அதிக மதிப்பெண்களைப் பார்த்துத் தமிழகப் பெற்றோர்கள் பூரித்துப் போயிருந்த அதே கணத்தில் ரிஃபாத்திடம் பேசினோம்...

நாசா விஞ்ஞானி ரிஃபாத்
"உங்களைப் பற்றிச் சொல்லுங்க ரிஃபாத்..."
"என் பெயர் முகமது ரிஃபாத் ஷாரூக். இப்போதான் +2 முடிச்சேன். `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'வின் தலைமை சயின்டிஸ்ட். நான் கண்டுபிடிச்ச 64 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள் நாசாவின் ராக்கெட்டில் கூடிய சீக்கிரமே பறக்கப்போவுது."
"நேற்றிலிருந்து இந்த கேள்விக்கு பதில் சொல்லியே அசதி ஆகியிருப்பீங்க. இருந்தாலும் கேட்குறேன் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கீங்க?"
"ஹாஹா... 750 மார்க் வாங்கியிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பிஸிக்ஸ்ல 132 மார்க். நான் 750 - 850 வரும்னு எதிர்பார்த்தேன். அதே மாதிரிதான் வந்துருக்கு."
"மதிப்பெண்கள் குறைந்ததற்கு வீட்டில் திட்டு விழுந்ததா?"
"அப்படி எதுவும் நடக்கலை. அம்மா, மாமா ரெண்டு பேரும் எதுவும் சொல்லலை. டீச்சர்ஸ் தான் இன்னும் கொஞ்ச அதிக மார்க் வாங்கியிருக்கலாமேனு சொன்னாங்க. இடையில் எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமப் போயிடுச்சு. காலாண்டுத் தேர்வுகள் எழுத முடியாமல் போகிடுச்சு. அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இன்னும் நல்ல மார்க் வாங்கியிருப்பேனு சொன்னாங்க."
"இங்கே மதிப்பெண்களை வைத்துத்தான் ஒரு மாணவனின் புத்திசாலித்தனத்தை முடிவு பண்றாங்க. அதை எப்படிப் பார்க்குறீங்க?"
"நல்ல மார்க் வாங்கின பசங்க கண்டிப்பா நல்ல படிப்பாளியாகத் தான் இருப்பாங்க. ஆனால், அவங்க எல்லோருமே அறிவாளியானு கேட்டால், உண்மையில் எல்லோருமே கிடையாது. பாடப் புத்தகங்களை அட்டை டு அட்டை மனப்பாடம் பண்ணி அதை அப்படியே பரீட்சையில் எழுதி, ஆயிரத்திற்கு மேல் மார்க் வாங்கி எந்தப் பிரயோஜனமும் இல்லை. படிக்குற பாடத்தை நல்லாப் புரிஞ்சு படிக்கிறது தான் முக்கியம்னு நினைக்கிறேன். மெமரி பவரை விட, க்ரியேட்டிவாக சிந்திக்குற தன்மை ஒரு மாணவனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கின பெரும்பாலானவங்க ஒயிட் காலர் வேலைகளுக்கு போகணும்னு தான் ஆசைப்படுவாங்க. யாரும் சயின்டிஸ்டாகவோ, ஆர்டிஸ்டாகவோ, பிஸினஸ் பண்ணணும்னோ ஆசைப்படுறது இல்லையே..."
"ஒரு மாணவன் தனது கற்பனைத் திறனையோ, கலை ஆர்வத்தையோ வெளிப்படுத்த நம் பள்ளிகள் போதிய ஆதரவு தருகின்றனவா..?"
"முழு ஆதரவு தருகின்றனனு சொல்ல முடியாது, முழு ஆதரவு தரணும்னு சொல்லிக்கிறேன். பெற்றோர்கள் தான் இதற்கு முக்கியக் காரணம். பெற்றோர்களே தனது மகனோ/ மகளோ க்ரியேட்டிவாக, கலை அல்லது விளையாட்டு ஆர்வத்தோட இருக்கிறதை விரும்புறதில்லை. படிச்சு நல்ல மார்க் எடுத்து இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்ந்துட்டா போதும்னு நினைக்கிறாங்க. ஸ்கூலும் `ஸ்டேட் ரேங்க் எடுத்த மாணவர்கள்'னு பேனர் வைக்க மட்டுமே ஆசைப்படுறாங்க. படிப்பைத் தாண்டி ஸ்கூல்ல மற்ற விஷயங்கள் சொல்லித் தருவது  குறைஞ்சுக்கிட்டு வருது. நிறைய ஸ்கூல்ல மாணவர்களை சயின்ஸ் எக்ஸ்பிஷனுக்குக் கூட அனுப்புறது இல்ல. மாணவர்கள் மனப்பாடம் செஞ்சு நல்ல மார்க் எடுத்தாலே போதும்னு நினைக்கிறாங்க. புதிதாய் ஏதாவது ஒண்ணு உருவாக்கணும்னு யாருமே நினைக்குறதில்லை, அப்படி ஒரு மாணவன் செய்தாலும் அதை விரும்புறதில்லை. இன்னொரு முக்கியமான காரணம், 11,12-ஆம் வகுப்புகளில் துறைகள் ரொம்பக் குறைவா இருக்கு. எனக்கு புவியியல்னா ரொம்பப் பிடிக்கும். ஆனால், இங்கே புவியியல் எடுத்தால் மேத்ஸ் எடுக்க முடியாது. மேத்ஸ் எடுத்தால் புவியியல் எடுக்க முடியாது. நமக்கு உள்ள ஆர்வத்திற்கு ஏற்றார்போல் இங்கே குரூப் தேர்ந்தெடுக்குறது ரொம்பவே சிரமம். இது தான் இன்னைக்கு இங்கே பள்ளிக் கல்வியோட நிலைமை."
"உங்களைப் போன்று  இந்த ஆண்டு +2 முடித்த உங்கள் நண்பர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"
"நாம எடுத்த மதிப்பெண்களை மாற்ற முடியாது. ஆனால், நமக்குப் பிடிச்ச துறையை இனிமேல் தேர்ந்தெடுத்து நம்ம வாழ்க்கையை நமக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம். நீங்க படிச்ச அல்ஜீப்ரா, ட்ரிக்னாமெட்ரி எல்லாமே ஏதோ ஒரு இடத்தில் உங்களுக்கு உபயோகப்படும். படிச்சது எதுவும் பயன்படாமல் போகாது.  பெற்றோர்களும் மற்ற மாணவர்களோடு உங்கள் பிள்ளைகளை கம்பேர் பண்ணாதீங்க, படிப்பு விஷயத்தில் அழுத்தம் கொடுக்காதீங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துறையில் கண்டிப்பா திறமையானவங்களாக இருப்பாங்க. அதைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்களை வழிநடத்தினாலே போதும். எல்லோரும் சாதனை மாணவர்களாக உருவாகலாம்." 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022