இனி பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு - தனியார் பள்ளிகளுக்கு அரசு 'செக்' !
பிளஸ் 2 , எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் போல இனி பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த பரிசீலனை செய்யப்ப
டும் என்று அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
இந்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு பிளஸ் 2 பாட புத்தகங்களை மட்டுமே நடத்தும் கோழிப்பண்ணை தனியார் பள்ளிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. பிளஸ் 1 பாடப்புத்தகங்களை மாணவர்களின் கண்களில் காட்டாமல் பிளஸ் 2 பாடப்புத்தகங்களை மட்டுமே மனப்பாடம் செய்ய வைக்கும் தனியார் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நன்றாக படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் மேல்நிலைக்கல்வியில் சேர்ந்த உடன் பிளஸ் 1 பாடப்புத்தகங்களை சரியாக படிப்பதில்லை. காரணம் பொதுத்தேர்வு இல்லையே என்ற அஜாக்கிரதைதான். இது பிளஸ் 2 வகுப்பிற்குள் நுழைந்த உடன் அதிக அழுத்தத்தை தரும்.
அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்கள், பிளஸ் 1 பாடப் புத்தகங்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்கள். ஆனால் வியாபார நோக்கில் நடத்தப்படும் தனியார் பள்ளிகளிலோ 9ஆம் வகுப்பு, பிளஸ் 1வகுப்பு பாட புத்தகங்களை நடத்துவதே இல்லை.
பிளஸ் 1 சேரும்போதே பிளஸ் 2 பாடப்புத்தகங்களைத்தான் படிக்கச் சொல்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரே பாட புத்தகத்தை படிக்க வைத்து அவர்களை மனப்பாட புழுக்களாக மாற்றி விடுவார்கள். அந்த மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் என்ன இருக்கும் என்பதே தெரியாது.
இதனால் அரசு பள்ளி மாணவர்களை விட தங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதாக ஒருவித மாயத்தோற்றத்தை உருவாக்கி, கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து விட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகின்றன தனியார் பள்ளிகள்.
இது போன்ற பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக 3 ஆண்டுகளுக்குள் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு இடிதான். பள்ளி பொதுத்தேர்வில் ரேங்க் முறையை மாற்றிய செங்கோட்டையன், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வை நடத்தி விட்டால் நிஜமாகவே வரலாற்றில் இடம்பெற்று விடுவார்.