இந்த ஆண்டே பிளஸ் 1 பொது தேர்வு:இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது.
பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு, இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது. பிளஸ் 1 பெயிலானாலும், பிளஸ் 2 படிக்க, இந்த பொது தேர்வு வழி செய்கிறது
.
'பிளஸ் 1க்கு கட்டாயம் பொது தேர்வு நடத்த வேண்டும்' என, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் கூடி, பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. இது குறித்து, நிபுணர்களிடம் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, பிளஸ் 1க்கு, இந்த ஆண்டே பொது தேர்வு நடத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை, இரண்டு நாட்களில் வெளியாகிறது.
நடைமுறை என்ன?
* அனைத்து பள்ளிகளும், பிளஸ் 1 வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். ஆண்டு இறுதியில், அரசு தேர்வுத் துறை மூலம், மாநிலம் முழுமைக்கும் பொதுவாக, பிளஸ் 1 பொது தேர்வு நடத்தப்படும்
* அந்த மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வு முடித்த பின், இரண்டு தேர்வுக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்
* இரண்டு ஆண்டு படிப்பிலும், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், உயர்கல்விக்கு செல்ல முடியாது
* இரண்டு ஆண்டு மதிப்பெண்களுக்கும், சமமான, 'வெயிட்டேஜ்' வழங்கப்பட்டு, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில், 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள இந்த நடைமுறை, ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அமலில் உள்ளது.
தனித்தேர்வர்களுக்கும் பிளஸ் 1 தேர்வு உண்டு
பள்ளிக்கு வராத தனித்தேர்வர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், பொது தேர்வு எழுத அனுமதிக்கப் படுகின்றனர். இவ்வாறு பிளஸ் 2 தேர்வு எழுதுவோர், பிளஸ் 1 பாடம் படித்து, தேர்வு எழுதுவதில்லை. ஆனால், அரசு கொண்டு வரும் புதிய உத்தரவில், பிளஸ் 1க்கும் பொது தேர்வு வருகிறது. எனவே, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுத வேண்டும் என, புதிய விதிகள் சேர்க்கப்பட உள்ளன.
பெயிலானாலும் பிளஸ் 2 படிக்கலாம்
பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சிக்காக, பிளஸ் 1 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், தனியார் பள்ளிகளால் வெளியேற்றப் படுகின்றனர். பிளஸ் 1க்கு பொது தேர்வு வந்தால், அதில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 2 படிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொது தேர்வு முடித்து, மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விடாமல் தடுக்க, புதிய அரசாணையில் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, பிளஸ் 1ல், மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2வுக்கு செல்லலாம். அவர், பிளஸ் 2 சேர்ந்தவுடன், சிறப்பு துணை தேர்விலோ அல்லது டிசம்பரில் நடக்கும் துணை தேர்விலோ, தோல்வி அடைந்த, பிளஸ் 1 பாடத்துக்கு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.