மே 30-இல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு.


ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மே 30-ஆம் தேதி மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவது என மருந்து
வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் பொதுச்செயலர் கே.கே. செல்வன் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசு நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கும் சட்ட மசோதாவை விரைவில் கொண்டு வர உத்தேசித்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் உள்ள 8 லட்சம் மருந்து வணிகர்களும், தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் மருந்து வணிகர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பர்.
இணையதளம் மூலம் வாங்கப்படும் மருந்துகளில் போலி மருந்துகள் விற்கப்படும் அபாயமும் உள்ளது. இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இணையதள மருந்து வணிகம் வளர வளர கிராமங்களில் உள்ள மருந்துக்கடைகள் மூடப்படும்.

நோயாளிகளின் அவசரத் தேவைக்கு மருந்துகள் கிடைக்காது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் மே 30-ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளோம். அன்றைய தினத்தில் தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரம் கடைகள் மூடப்படும். இருப்பினும் மருத்துவமனைக்கு உள்ளிருக்கும் மருந்து கடைகள் திறந்திருக்கும். அத்தியாவசிய மருந்துகள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதேபோல, மத்திய அரசு உத்தேசித்துள்ள மருந்து விற்பனையை இணையதளத்தில் பதிவு செய்யும் முறை, மருந்து உரிமக் கட்டணத்தை உயர்த்தும் முடிவையும் எதிர்க்கிறோம்.
கடையடைப்பு போராட்டத்தை அடுத்தும் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் அடுத்தகட்டமாக காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் எஸ். ராமச்சந்திரன் வரவேற்றார். பொருளாளர் கே. கோபிரத்தினம், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank