4G நெட்வொர்க் தெரியும்... 5G நெட்வொர்க்கில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?


       4G நெட்வொர்க் சேவை இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது என்று உறுதியாகச்
சொல்லலாம். தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலையில் ஸ்கோர்கார்டை ஸ்க்ரோல் செய்த இளைஞர்கள், இன்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் மொபைலிலேயே மேட்ச் பார்த்து ட்வீட் தட்டுகின்றனர். வீடியோ கால், மிகப்பெரிய ஃபைல்களையும் நிமிடங்களில் டவுன்லோடு செய்வது என பலரின் இணையப் பயன்பாடே மாறியுள்ளது.


4G சிம் பயன்படுத்தக்கூடிய மொபைல்களை மட்டுமே அனைவரும் தேடி வாங்குகின்றனர். இந்நிலையில், 2G, 3G, 4G வரிசையில் அடுத்ததாக வரவிருக்கும் 5G பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 5G நெட்வொர்க் சேவையில் என்னென்ன வசதிகள் இருக்கும் எனப் பார்ப்போமா!

4G நெட்வொர்க்கை மிஞ்சும் 5G!

1G, 2G, 3G, 4G போன்றவற்றில் குறிப்பிடப்படும் G என்பது தலைமுறையைக் (Generation) குறிக்கும். அது இணையத்தையோ அல்லது இணையத்தின் வேகத்தையோ குறிப்பதில்லை. 4G நெட்வொர்க் சேவையில் உள்ள வசதிகளை விடவும் மேம்பட்ட, அடுத்த தலைமுறை வசதிகளை உள்ளடக்கியது தான் 5G. ஒவ்வொரு தலைமுறை நெட்வொர்க் சேவையிலும் இருக்க வேண்டிய வசதிகளைப் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியன் (International Telecommunications Union) தான் வரையறுக்கிறது. அந்த வரையறையின் அடிப்படையில் தான் மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியையும், சேவையையும் வழங்குகின்றன. இந்நிலையில், 5G நெட்வொர்க் சேவையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சில வசதிகள் பற்றி சமீபத்தில் ஐ.டி.யூ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தடையற்ற தொலைத்தொடர்பு :

தங்கு தடையற்ற தொலைத்தொடர்பு சேவையே 5G-யின் முக்கிய நோக்கமாகும். ஒரு டவர் இருக்கும் பகுதியைக் கடந்து, மற்றொரு டவர் இருக்கும் பகுதிக்குப் பயணிக்கும்போது சிக்னல் கட் ஆகும் பிரச்னை தற்போது இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படும் 'கால் ட்ராப்' பிரச்னை கண்டிப்பாக 5G-யில் இருக்கக்கூடாது என்கிறது ஐ.டி.யூ. ஒரு மணி நேரத்தில் 500 கி.மீ வேகத்தில் பயனாளர் வெவ்வேறு டவர்களைக் கடந்து ரயிலில் பயணிக்கும்போது கூட சிக்னல் கட் ஆகக்கூடாது என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.

இணைய வேகம் :

ஓர் இணைப்பிலிருந்து மற்றொரு இணைப்புக்குத் தகவலைப் பரிமாறிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் குறையக்குறைய இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும். 5G நெட்வொர்க் சேவையில் இந்த நேரமானது 4 மில்லி செகண்ட் முதல் 1 மில்லி செகண்ட் அளவுக்குள்தான் இருக்க வேண்டும். அதிவேகமாக செயல்படும் 4G சேவையில் கூட, டேட்டாவை பரிமாறிக்கொள்ள 50 மில்லி செகண்ட்கள் ஆகின்றன.

பேட்டரி திறன் :

4G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மொபைல் பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் பிரச்னை இருக்கும். இதை ஈடுசெய்வதற்காகவே முன்பை விட அதிக திறன் கொண்ட பேட்டரியை மொபைல் உற்பத்தியாளர்கள் தயாரித்து வருகின்றனர். 5G நெட்வொர்க் சேவையிலும் நீடித்த பேட்டரித் திறன் அவசியம் என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.

எப்போது அறிமுகமாகும்?

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-ம் ஆண்டுக்குள் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2020-ம் ஆண்டை இலக்காக வைத்து, 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 5G அறிமுகமாக எப்படியும் 2020-ம் ஆண்டு ஆகலாம்.

5G

பயன்கள் :
5G நெட்வொர்க் சேவையில் மின்னல் வேகத்தில் இணையம் செயல்படும் என்பதால், முழுநீளத் திரைப்படத்தையும் கூட சில நிமிடங்களில் டவுன்லோடு செய்ய முடியும். டவுன்லோடு மற்றும் அப்லோடு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக இருக்கும்.

வீடியோ கால் செய்யும்போது எதிரே இருப்பவர் பேசுவது சில நொடிகள் தாமதமாகத்தான் நமக்குக் கேட்கும். வீடியோவும், ஆடியோவும் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். 5G நெட்வொர்க்கில் இணையத்தின் வேகம் அபரிமிதமாக இருக்கும் என்பதால், தாமதம் ஏதும் இன்றி வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ரியல் டைமில் ஆக்மென்டட் ரியாலிட்டி சேவை அதிகளவில் பயன்படுத்தப்படும். உதாரணமாக, சாலையில் நடந்து செல்லும்போது, ஓர் இடத்தைப் பற்றிய முழு விவரமும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் நொடிப்பொழுதில் லோட் ஆகும்.

பொருள்களின் இணையம் (Internet of Things) மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள், தற்போது இருப்பதைவிட 5G நெட்வொர்க் சேவையில், அதிக அளவில் பயன்படுத்தப்படும். அலுவலகத்தில் இருந்தபடியே ஸ்மார்ட் ஸ்டவ் மூலம் சமையல் மேற்கொள்ள முடியும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022