பூமியை நோக்கி வரும் 5 எரிகற்கள்! நாசா தகவல்!!
விண்வெளியில் சுற்றி வரும் எரிகற்கள் அவ்வப்போது பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இதுபோன்ற ஒரு எரிக்கல் பூமி மீது மோதியதன் விளைவாகவே டைனோசர்களின் இனம் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. தற்காலத்தில் பூமியில் விழுந்த சிறிய அளவிலான எரிகற்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் எரிகற்களால் பூமிக்கு உள்ள அச்சுறுத்தல் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நாசா விண்வெளி நிலையம் நேற்று முன்தினம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பூமியை நோக்கி 5 எரிகற்கள் வந்துகொண்டு இருப்பதாகவும், இவற்றில் ஒரு எரிக்கல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என தெரிவித்துள்ளது. எதிர்வரும் யூலை 23-ம் தேதி முதல் எரிக்கல் பூமியில் இருந்து 5 லூனார் தூரத்தில் கடந்து செல்லும். ஒரு லூனார் தூரம் என்பது 3,84,400 கி.மீ ஆகும். இதற்கு அடுத்ததாக அக்டோபர் 12, டிசம்பர் 17, அடுத்தாண்டு பிப்ரவரி 24 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து எரிகற்கள் பூமியை கடந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இவற்றில் அக்டோபர் 12-ம் தேதி வரும் எரிக்கல் பூமிக்கு மிக அருகில்(0.15 லூனார் தூரம்) கடந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றாலும் இந்த 5 எரிகற்களால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது.