இடமாறுதல் கலந்தாய்வில் பின்னடைவு : மாற்று திறனாளிகள் போராட முடிவு.
'பணியிட மாறுதல் கலந்தாய்வில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் முன்னுரிமை பறிக்கப்பட்டதற்கு, தீர்வு காணாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு, ஏற்கனவே இரண்டாம் நிலையில் இருந்த முன்னுரிமை வாய்ப்பு, சமீபத்திய அரசாணையால், ஆறாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்க மாநிலச் செயலர், நம்புராஜன் கூறிய
தாவது:ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான முன்னுரிமையை பறிக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வரும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதை விடுத்து, முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலரிடம், வலியுறுத்தி உள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால், மே, ௧௩ல் நடக்கும், எங்கள் சங்க மாநாட்டில் ஆலோசித்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.