பள்ளித் தேர்வுகள்... விருதுநகர் மாவட்டத்தின் வெற்றி ரகசியம் என்ன?
விருதுநகர் மாவட்டத்துக்குப் பல பெருமைகள் உண்டு. ஆம், தமிழகத்தின் அரசுச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொண்டது, ரமண மகஷிரி அவதரித்த திருச்சுழி அமைந்திருப்பது, கல்விக்க
ண் திறந்த காமராஜரைத் தந்தது... என இந்த மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கடந்த 1985-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து விருதுநகர் மாவட்டம் உருவானது. பட்டாசுக்கு சிவகாசி, டெக்ஸ்டைலுக்கு ராஜபாளையம், எண்ணெய்த் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற அருப்புக்கோட்டை போன்ற நகரங்களும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளன.
இவை தவிர, விருதுநகர் மாவட்டத்துக்கு மேலும் ஒரு சிறப்புப் பெருமையும் உள்ளது. தமிழ்நாட்டிலேயே பள்ளித்தேர்வுகளில் விருதுநகர் மாவட்டம்தான் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துவருகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்புத் தேர்வில் கிட்டத்தட்ட
26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம்தான் முதல் இடம். ஒரே ஒருமுறை மட்டும் 0.13 என்ற விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இன்று வெளியான ப்ளஸ் டூ தேர்விலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் 97.85 சதவிகிதம் பேர் தேர்வாகி மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றனர். பக்கத்து மாவட்டமான ராமநாதபுரம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,373 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 984 அரசுத் தொடக்கப் பள்ளிகள், 227 நடுநிலைப் பள்ளிகள், 132 உயர்நிலைப் பள்ளிகள், 145 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டிபோடுவதை இந்த மாவட்டத்தில் பார்க்க முடியும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்தால் உடனடியாக ஆசிரியர் - ஆசிரியைகள் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு உள்ள வசதிகள் குறித்து விளக்குவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 14 விதமான மாணவர்நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க முடிகிறது. ஆசிரியர்- ஆசிரியைகளை, பக்கத்துப் பள்ளிகளுக்குப் பயிற்சிக்காக அனுப்புகின்றனர். பல விஷயங்களை அவர்களும் புதிதாகக் கற்றுக்கொள்கின்றனர். பாடம் நடத்தும்விதத்தில் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கிடையே தேர்ச்சி விகிதத்தில் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.
படிப்பில் படுமோசமாக இருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற வைத்துவிடுகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டால் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மாணவர்களிடையே ஏற்பட்டுவிடும் என்பதற்காகத்தான் இந்த உத்தியை ஆசிரியர்கள் கடைப்பிடிக்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரில்இருந்து கடைநிலை ஊழியர் வரை அந்த மண்ணைச் சேர்ந்த அனைவருமே கல்வி விஷயத்தில் பொறுப்புமிக்கவர்களாக இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன் ஒருவன், மாஸ்கோவில் உள்ள ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிபெற தேர்வாகியிருந்தான். சிறுவனை ரஷ்யாவுக்கு அனுப்பும் வசதி, பெற்றோரிடம் இல்லை. இதைக் கேள்விப்பட்ட ரஷ்யாவில் வசிக்கும் விருதுநகரைச் சேர்ந்த தொழிலதிபர், அந்த மாணவனைத் தனது சொந்த செலவிலேயே மாஸ்கோவுக்கு வரவழைத்து, ஆராய்ச்சி மையப் பயிற்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். விருதுநகர் மாவட்ட மக்கள் எங்கே சென்றாலும் மண் மீது பற்றுடன் இருப்பதால், திறமைமிகுந்த மாணவர்களுக்கு எளிதாக உதவி கிடைத்துவிடுகிறது. அந்தத் தொழிலதிபரிடம் பேசியதுபோது, ''எங்க ஊர் பையன்... அவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை அவன் இழந்துடக் கூடாதுங்கிறது என்னோட எண்ணம்'' என்றார் மண்வாசனையுடன்.
விருதுநகர் மாவட்டத்தின் அடுத்த இலக்கு பொதுத்தேர்வுகளில் 100 சதவித தேர்ச்சியை எட்டுவதுதான். விருதுநகர் மாவட்டம்போலவே தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் மாறவேண்டும் என்பதே நமது ஆசையும்!