மின் வாரிய உதவி பொறியாளர் பணி சேராதவர் பட்டியல் வெளியாகுமா?
மின் வாரியத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 375 உதவி பொறியாளர்களில், சிலர் வேலைக்கு சேராமல் இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவி
ல் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை, எழுத்து மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்தது.
பல ஆண்டுகளுக்கு பின், அரசியல் குறுக்கீடுகளுக்கு இடம் கொடுக்காமல், திறமையின் அடிப்படையில் தேர்வான, உதவி பொறியாளர்களுக்கு, மார்ச் இறுதியில், பணி ஆணை வழங்கப்பட்டது.
அவர்கள், பணியில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், சிலர் இதுவரை வேலையில் சேரவில்லை என, கூறப்படுகிறது. இதனால், 375 பேரில், வேலைக்கு சேர்ந்தவர்கள் மற்றும் சேராதவர்களின் விபரங்களை, மின் வாரியம் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின், நேர்மையான முறையில், உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பலர் இளம் வயதினர். அவர்கள் ஏற்கனவே, தங்கள் கல்லுாரி வளாக நேர்காணலில் பங்கேற்று, முன்னணி தனியார் நிறுவனங்களில், வேலை செய்கின்றனர்.
மின் வாரியம் தர உள்ளதை விட, அங்கு அவர்கள், அதிக சம்பளம் வாங்குகின்றனர். இருப்பினும், மொத்தம், 375 பேரில், 95 சதவீதம் பேர் வேலைக்கு சேர்ந்து விட்டனர்.
எஞ்சியவர்கள், வேலையில் சேருவதற்கு, தகுந்த காரணங்களை தெரிவித்து, அவகாசம் கேட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.