முதுகலை பட்ட படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு : பல்கலை பதிவாளர் தகவல்
"மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்," என பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள முதுகலை பட்டப் படிப்புகளில், சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எஸ்.சி., பயோ டெக்னாலஜி, மரபணுவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்படுகிறது. திறமையான மாணவரை தேர்வு செய்யும் வகையில், அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மே 27, 28 ல் தேர்வு நடக்கும். மே 15க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுபோல் எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் உட்பட சில படிப்புகளுக்கு மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும். இதற்கான தேர்வு ஜூன் 18 ல் நடக்கிறது. இதற்கு மே 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள படிப்புகளுக்கு நுழைவு தேர்வு இல்லை, என்றார்.