அமைச்சர் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்ணீர் : அதிகாரிகள் சமாதானம்
மதுரை: சென்னையில் கல்வி அமைச்சர் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.பல்வேறு கோ
ரிக்கைகள் குறித்து, ஆறு ஆண்டுகளாகஆசிரியர் சங்கங்கள் போராடுகின்றன. அமைச்சர் மற்றும் செயலாளரை, எளிதில் சந்திக்க முடியாத சூழ்நிலையால், அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சமாதானம் செய்யும் வகையில் அமைச்சர் செங்கோட்டையன், கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 63 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்றன.
இதில் பகுதிநேர தொழில்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களைஅதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றநிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் 1.4.2003க்கு முன் பணியில் சேர்ந்த, பகுதிநேர தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு, அவர்களின் முந்தைய பணிக் காலம் மற்றும் 1.4.2003க்கு பின் உள்ள பணிக் காலத்திலும் முறைப்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற கோரிய போது, கண்ணீர் விட்டு அழுதனர்.மேலும் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் பங்கேற்ற நிர்வாகிகள், 'மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளம் மூலம் குடும்பம் நடத்துவது பெரும் சிரமமாகஉள்ளது. எங்களை நிரந்தரப்படுத்தி முறைப்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்,' என கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.
இதை எதிர்பார்க்காத அமைச்சர், அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டு, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என பதில் அளித்தார்.
பணியேற்ற நாளை கணக்கில் கொண்டு பதவி உயர்வு பெற்ற பட்டதாரிஆசிரியருக்கு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என தமிழாசிரியர் கழக மாநில பொது செயலாளர் முருகேசன் வலியுறுத்தினார், என்றனர்.