பிரிட்டன் பாட திட்டத்துக்கு நிகராக தமிழக பள்ளிக்கல்வி 'சிலபஸ்'
பிரிட்டன் பள்ளிகளுக்கு நிகரான பாடத்திட்டம், தமிழகத்தில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இடம் பெறும் குழு அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 2012ல், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 2006ல் அமலுக்கு வந்தது. பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 15 ஆண்டுகளாகியும், தமிழக அரசு அதை மாற்றவில்லை. அதனால், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்களுடன் போட்டி போட முடியாமல், தமிழக மாணவர்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், துறையை முழுமையாக சீரமைக்க, செயலர் உதயசந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், உயர் கல்வி துறையினரின் ஆலோசனைகளை பெற்று, உதயசந்திரன் பல சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.முக்கியமாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது.அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2வுக்கும், புதிய பாடத்திட்டம் வரவுள்ளது. இதற்காக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி சான்றிதழ் படிப்பு, லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டம் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நம்நாட்டில், பள்ளிக்கல்வியில், தரமான பாடத்திட்டம் உடைய, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள பாடத்திட்டங்களும், தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தேசிய கல்வியியல் வரைவு அறிக்கை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றுடன், பிரிட்டனின் பள்ளிப்படிப்பு பாடத்திட்டத்தையும் இணைத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, பல்கலைகளின் தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆங்கில புலமை பெற்ற பேராசிரியைகள், ஐ.ஐ.டி., ஆசிரியர்கள் ஆகியோர் இடம் பெறும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக்குழு, மூன்று மாதங்களுக்குள் பாடத்திட்டத்தை இறுதி செய்து வழங்கும்.அதன்பின், சர்வதேச தரத்தில் பாட புத்தகங்களை வடிவமைக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.