வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
மத்திய அரசின், வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டத்துக்கு, 2016ல், எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, தற்போது அதை ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது.
வீடுகள், கடைகள் மற்றும் மனைகளை வாடகைக்கு விடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண, மாதிரி வீட்டு வாடகை சட்டத்தை, 2015ல், மத்திய அரசு உருவாக்கியது. பின், மாநில அரசுகள் கருத்தை அறிய, அதன் வரைவு நகலை சுற்றுக்கு அனுப்பியது. பெரும்பாலான மாநிலங்கள், இதை ஏற்றாலும், தமிழக அரசு ஏற்கவில்லை.
'சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்தினால், வீட்டு உரிமையாளர்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும். வாடகைதாரர்களால், வீடு, மனை விற்பனை, மேம்பாட்டு திட்டங்கள் தடுக்கப்படும்' என்பதால், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது, இந்த சட்டத்தை ஏற்க, தமிழக அரசு தயாராகி விட்டது.ஒற்றை சாளர முறை
இது குறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ஒற்றை சாளர முறையில் திட்ட அனுமதி போன்றவற்றின் வரிசையில், மத்திய அரசின் வீட்டு வாடகை சட்டத்தையும் அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள், பதில் அளித்துள்ளனர். எனவே, இந்த சட்ட அமலாக்கத்துக்கான கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. விரைவில், இது குறித்த அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சமீபத்தில், தலைமை செயலகத்தில் நடத்திய ஆய்வுக்கூட்டத்தைதொடர்ந்து, இச்சட்டம் குறித்து, தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
* புதிய சட்டமானது, 1948 வாடகை கட்டுப்பாடு சட்ட அமலாக்கத்தில் இருந்த நடைமுறைகளை எளிதாக்குகிறது
* உரிமையாளர் - வாடகைதாரர் இருவரும் ஒப்புக்கொள்ளும் தொகையை வாடகையாக
நிர்ணயித்து, 12 மாத ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்
* வாடகை தொகையை உயர்த்த உரிமையாளர் விரும்பினால், இரண்டு மாதங்களுக்கு முன், வாடகைதாரருக்கு தெரிவிக்க வேண்டும்
* வீட்டில் கூடுதல் அறைகள் கட்டும் உரிமையாளரின் நடவடிக்கைகளை, வாடகைதாரர் தடுக்க முடியாது
* வாடகை மற்றும் முன்பண தொகையை முடிவு செய்ய வழிமுறைகள் வகுக்கப்படும்
* வாடகைதாரருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், சம்பந்தப்பட்ட இடத்துக்கு உரிமையாளர் செல்ல கட்டுப்பாடு வருகிறது.