கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை


      'பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தமிழக பள்ளிகளில் மெட்ரிக், ஓரியன்டல், ஆங்கிலோ இண்டியன், மாநில பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன. இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது. 

இதையடுத்து, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, 2012 - 13ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து தேர்வுகள் நடந்தன.  
2013- 14ல் ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ச்சியாக '2014- 15 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் இம்முறை அமல்படுத்தப்படும்' என கல்வித்துறை அறிவித்தது; ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. 
இதனால் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு சென்றவுடன் ஒரு ஆண்டு பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. 
தற்போது இதற்கு தீர்வாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 
இதே முறையை சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் கொண்டு வந்தால் எளிய முறையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
சி.பி.எஸ்.இ.,ல் மாற்றம்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இருபருவ முறையில் வரும் கல்விஆண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
இதன்படி, ஆறாம் வகுப்பில் முதல் பருவ பாடத்தின் 10 சதவீத பகுதிகள், இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்; ஏழாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 20 சதவீத பாடமும், எட்டாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 30 சதவீத பாடங்களும் இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்.
மேலும் ஒன்பது, பத்தாம் வகுப்பில் ஓராண்டு பாடங்களை படித்து தேர்வு எழுதும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
'இதே முறையை தமிழக கல்வித்துறையும் பின்பற்றினால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிய முறையில் எதிர்கொள்ள முடியும்' என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் முழு பாடங்களையும் படித்து தேர்வு எழுதுவதால் மாணவர்கள் மனதளவில் சிரமப்படுகின்றனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இருபருவ கல்வி முறையை அமல்படுத்தி இரண்டாம் பருவ தேர்வுகளில், முதல் பருவ முக்கிய பாடங்களை இணைத்து தேர்வு நடத்த வேண்டும். இதன் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வை எளிமையாக எதிர்கொள்ள முடியும்.
இவ்வாறு கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank