சிறுபான்மையின மாணவர்கள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அன்புச்செல்வனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. இதை பெற குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்து 3 ஆயிரத்து மிகாமலும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இக்கடனுதவி வழங்கப்படும். சென்னை மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 60 சதவிகிதம் சிறுபான்மையினர் அங்கத்தினர்களாக உள்ள சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்க அதிகபட்சம் ஒரு குழுவிற்கு இருபது லட்சமும், நபர் ஒருவருக்கு ஒரு லட்சமும் 7 சதவிகித வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது.
தாய்கோ வங்கி மூலம் தனிநபர் கடன் திட்டத்தில் ஆட்டோ வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்ப இளங்கலை கல்வி பயில் வருடத்திற்கு 3 லட்சம் வீதம் அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும், முதுகலை பயில வருடத்திற்கு 3 லட்சம் வீதம் அதிகபட்சம் 9 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் கல்வி பயில வருடத்திற்கு 4 லட்சம் வீதம் அதிகபட்சம் 20 லட்சம் வரையிலும் 3 சதவிகிதம் வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் உதவி பெறுவதற்கான அனைத்து விபரங்கள் மற்றும் கட்டணமின்றி விண்ணப்பங்களை பெற சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம். சென்னை இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளிலும் கட்டணமின்றி விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.