'ஜெனரிக்' மருந்து கடைகள் திறப்பதில் ஆர்வம் அதிகரிப்பு
தமிழகத்தில், 'ஜெனரிக்' மருந்து கடைகள் திறக்க, அரசு பெரிதாக அக்கறை காட்டாத போதும், மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், ஆங்காங்கே, ஜெனரிக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
மிக குறைந்த விலையில், மருந்து, மாத்திரைகளை வாங்க வகை செய்யும், 'ஜெனரிக்' மருந்து விற்பனை திட்டம், 2008ல் நடைமுறைக்கு வந்தது. திட்டத்தை, அப்போதைய, காங்., அரசு கிடப்பில் போட்ட நிலையில், தற்போதைய, பா.ஜ., அரசு, நாடு முழுக்க விரிவுபடுத்த ஆர்வம் காட்டி வருகிறது.
மத்திய அரசின், ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகம் சார்பில், 'பீரோ ஆப் பார்மா' அமைப்பு, ஜெனரிக் மருந்துக் கடைகள் திறக்க, உரிமம் வழங்கி வருகிறது; இதற்கு, 2.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வை, அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
கேரளாவில், 185 கடைகள் செயல்படுகின்றன. உ.பி.,யில், 1,000 கடைகளை திறக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், திறக்கப்படும் ஜெனரிக் மருந்து கடைகளில், அப்போதைய முதல்வர் ஜெ., புகைப்படத்தை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையும், தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்டது.மத்திய அரசு, இதை ஏற்காததால், தமிழக அரசும், ஜெனரிக் மருந்துக் கடைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. ஆயினும், ஜெனரிக் மருந்து தொடர்பான விழிப்புணர்வு, மக்களிடையே அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், 200க்கும் மேற்பட்டோர், மருந்து கடைகளை திறக்க மனு வழங்கியுள்ளனர்.
'பீரோ ஆப் பார்மா' சார்பில், மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 85 மருந்து கடைகள் திறக்க உரிமம் வழங்கப்பட்டு, 52 கடைகள் செயல்பட துவங்கியுள்ளன. ஜூன் மாதத்துக்குள், 200 கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.