போஸ்ட் ஆபீஸில் கணக்கு இருப்பவர்களுக்கு புது சிப் ஏடிஎம் கார்டு! இனி எல்லாமே ஈஸி
தமிழகம் முழுவதும் போஸ்ட் ஆபிஸ்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அஞ்சலகத்தில், தபால் மற்றும் பார்சல் சேவையுடன் வங்கிச் சேவைகளும், ஏடிஎம், பாஸ்போர்ட் பெறுதல் போன்ற வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அஞ்சலகத்தில், ரூ.50 இருப்புத்தொகையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுவருகிறது.
போஸ்ட் ஆபிசில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் எனவும், சர்வீஸ் சார்ஜ் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டினர்.
இந்தியா முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என 4 மண்டலங்களில் 94 தலைமை தபால் நிலையங்கள் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 185 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
தமிழகம் முழுவதுமாக உள்ள அஞ்சலகங்களில் 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும்போது ரூபே ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டது.
இந்த கார்டுகளை வாடிக்கையாளர்கள் ரெடிமேட் ஷோரூம்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் போன்றவற்றில் பயன்படுத்த இயலவில்லை.
இந்நிலையில் இதை போக்குவதற்காக தமிழகத்தில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த கார்டு வழங்கப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்கள் அந்த ஏடிஎம் கார்டுகளை வங்கி ஏடிஎம்களை போல் அனைத்து பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம் என்று தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்