Introduction of a new method to control for Whatsapp! - Central Government
'வாட்ஸ் ஆப்'பை கட்டுப்படுத்த புதிய வழிமுறை அறிமுகம் : மத்திய அரசு உறுதி
'சமூகதளமான, 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவோரின் தனிமனித உரிமையை பாதுகாக்கும் வகையில், இதுபோன்ற சமூகதளங்களை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் புதிய வழிமுறை அறிமுகம் செய்யப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'வாட்ஸ் ஆப்' சமூகதளத்தை, 'பேஸ்புக்' சமூகதளத்தை நடத்தி வரும், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, 2016ல் புதிய தனிநபர் கொள்கையை வாட்ஸ் ஆப் அறிவித்தது. இதன் மூலம் பயனாளிகளின் தகவல்கள், பேஸ்புக்
சமூகதளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை, நீதிபதி தீபக் மிஸ்ராதலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் கோடைக்கால அமர்வு விசாரித்து வருகிறது.
. தனிநபர் தகவல்
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில், கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: தனிமனித உரிமையை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வாட்ஸ் ஆப்விவகாரத்தில், இதுபோன்ற சமூகதளங்கள், தனிமனித சுதந்திரத்தை, உரிமையை பறிப்பதை தடுக்கும் வகையில், ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிநபர் தகவல் பகிர்ந்து கொள்வதை தடுக்கும் வகையில், தனி அமைப்பு உருவாக்கப்படும் அல்லது இது தொடர்பாக தனி உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், 'பயனாளிகளின் எந்தத் தகவலையும், மூன்றாவது நபருக்கு அளிக்கவில்லை' என, வாட்ஸ் ஆப் நிறுவனம் நேற்று தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணையை, ஜூலை, 11க்கு, சுப்ரீம் கோர்ட் அமர்வு ஒத்திவைத்துள்ளது.