NEET தேர்வில் மற்றொரு சர்ச்சை

NEET தேர்வில் மற்றொரு சர்ச்சை : ஹிந்தி, ஆங்கில மொழியில் தேர்வெழுதியவர்களுக்கு 'சலுகை'

நீட் தேர்வில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்களும், மற்ற மொழி வினாத்தாள்களும் வேறுபட்டு, மதிப்பெண் வழங்கும் முறையிலும் வித்தியாசம் இருந்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மூலமாக இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. நீட் தேர்வெழுதிய பெங்காலி மாணவர்களுக்கு, ஆங்கில வினாத்தாளும், பெங்காலி வினாத்தாளும் ஒன்று போல இல்லாததது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு நீட் இந்தியா முழுவதும் கடந்த 7ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வினை பெங்காலி மொழியில் எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது வினாத்தாளும், ஆங்கிலம் அல்லது ஹிந்தி வினாத்தாளும் வேறு வேறாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு மட்டும் அல்லாமல், மதிப்பெண் வழங்கும் முறையும் வேறாக இருந்ததையும், மற்ற மொழிப் பாடங்களை விட ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு வினாக்கள் எளிதாக இருந்ததையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி உட்பட 10 மொழிகளில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், சிபிஎஸ்இ, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி வினாத்தாளை தயாரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

2013ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் போது, அனைத்து வினாக்களும் ஒன்று போல தயாரிக்கப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பு மட்டுமே செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை பெங்காலி மற்றும் குஜராத்தி வினாத்தாள்கள் மட்டுமே ஒன்று போல இருந்தன. 2016ம் ஆண்டு பெங்காலி மொழி நீட் தேர்வில் இடம்பெறவில்லை.

பெங்காலி மொழியில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் சிலர், நாங்கள் தேர்வெழுதிய பிறகு எங்களுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தேர்வெழுதிய எங்கள் நண்பர்களுடன் பேசும் போதுதான், எங்கள் வினாத்தாளும், அவர்களது வினாத்தாளும் வேறு வேறாக இருந்ததை அறிந்தோம். ஆனால், ஆங்கிலத்தில் இருக்கும் வினாக்களே, மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு ஒன்றாக இருக்கும் என்றே நாங்கள் கருதினோம்.

வினாக்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையும் வேறுபாட்டுள்ளது. பெங்காலியை விட, ஹிந்தியில் அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வினாக்களுக்கான மதிப்பெண்களும் குறைவாகவே இருந்தது.  இதனால், ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் ஒரு வினாக்கான விடையைத் தவறாக எழுதியிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சில மதிப்பெண்களே குறையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் சுஷாந்தா பண்டோபாத்யாய் இது குறித்து கூறுகையில்,"இது சரியல்ல" என்று தெரிவித்தார்.

என்சிஇஆர்டியும், பெங்கால் பள்ளிக் கல்வித் துறை பாடங்களும் வேறு வேறாக இருந்தாலும் நீட் தேர்வினால், பெங்காலி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட மாட்டார்கள், ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. வினாத்தாள்களில் இதுபோல வேறுபாடு இருக்கும் போது, இந்த தேர்வு எப்படி பொதுவானதாக எடுத்துக் கொள்ளப்படும் என பெங்காலில் பயிற்சி மையம் நடத்தி வரும் சுனில் அகர்வால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், நீட் தேர்வுக்கான நடைமுறைகளின் போது சிபிஎஸ்இ நிர்வாகம், வினாத்தாள்கள் அனைத்தும் வேறு வேறாக இருக்கும் என்பதை ஒரு முறை கூட தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே, தமிழகத்தில் கிராமப் புற மாணவ, மாணவிகள் இந்த தேர்வினால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நீட் பொதுத் தேர்வை தமிழகம் எதிர்த்து வந்த நிலையில், தற்போது இதுபோன்ற முறைகேடுகள் வெளியாகியிருப்பது தமிழகத்தின் வாதத்தை உறுதி செய்வதாகவே உள்ளது.

நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் இல்லாத நிலையில், பொதுத் தேர்வு என்பதை கட்டாயமாக்குவதே மிகப்பெரிய அத்துமீறலாக இருக்கும் நிலையில், ஒரு சில மொழியில் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் சலுகை மதிப்பெண்களும், கேள்விகளும் இடம்பெற்றிருப்பது மத்திய அரசும், அதனால் இயக்கப்படும் மற்ற நிர்வாகங்களும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் ஏனைய விஷயங்களை அணுகுவதை உணர முடிகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)