Plus Two Public Exam: Total Marks 600 Only - GO Soon will publish?
வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல், மூன்று நிறங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்பட உள்ளன. அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத்தேர்வும் அமலாக உள்ளது.
புதிய மதிப்பெண் முறை
இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில்,
வினாத்தாள் முறை மற்றும் மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முதலில், பிளஸ் 1க்கும், அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2க்கும் புதிய மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, தற்போது பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கு, தலா, 1,200 ஆக இருக்கும் மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்படும்.
அரசாணையாக
இதில், செய்முறை தேர்வு இருக்கும் பாடங்களில் அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுக்கு, தலா, 10 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு, 80 மதிப்பெண்களும் இருக்கும் என, தெரிகிறது.
மேலும், நான்கு முக்கிய பாடங்களில், ஒரு பாடம் மட்டும், விருப்பப் பாடமாக வழங்கப்பட உள்ளது.
அதேபோல், தேர்வு எழுதும் நேரத்தையும், மதிப்பெண்ணுக்குஏற்ப குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'இதற்கான கோப்பு, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின், அரசாணையாக வெளியிடப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வினாத்தாளும் மாறுகிறது!
பொதுத்தேர்வுகளில் மாற்றம் வரும் போது, வினாத்தாள் தயாரிப்பு முறையும் மாற்றப்பட உள்ளது. மாணவர்கள், புத்தகத்தில் உள்ள வரிகளை மனப்பாடம் செய்து, கட்டுரை வடிவில் எழுதும் தேர்வு முறை, தற்போது உள்ளது.
இதில், அதிக மதிப்பெண் பெற்றாலும், போட்டி தேர்வுகளிலும், உயர் கல்வியிலும், மாணவர்களால் ஜொலிக்க முடிவதில்லை. எனவே, வினாத்தாளில், சி.பி.எஸ்.இ., போல் மாற்றம் செய்யப்பட உள்ளது.