Special TET Exam: சிறப்பாசிரியர்கள் தகுதி தேர்வு நனவாகுமா?
தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இசை, ஓவியம்,
உடற்கல்வி, கணினி, தையல் என இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன.
அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில் தேவை கருதி, 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், 11 ஆண்டுகளாக கல்வித்துறையில் இவ்வகை ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் நடக்கவில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்த முடிவான போது சிறப்பாசிரியர்களுக்கான, தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், சிறப்பாசிரியர் தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இசை ஆசிரியர் கழக செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: மாநிலத்தில் 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில், நிரந்த நியமனங்கள் நடக்கவில்லை. சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பில்லாததால் பலர், பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு தினக் கூலிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்களாக இருந்தவர்கள் சிறப்பாசிரியர் விஷயத்தில் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. செயலாளர் உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின், மூன்று ஆண்டுகளாக நடக்காமல் இருந்த டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதைபோல் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வையும் நடத்த செயலர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.