பெட்ரோல் விலை நாள்தோறும் நிர்ணயம்: நாடு முழுவதும் 16-ஆம் தேதி முதல் அமல்!!!
பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை, நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம்
செய்யப்படுமா? என்பது குறித்து தகவல் இல்லை என்று அந்த தனியார் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டீகர் ஆகிய 5 நகரங்களில் சோதனை முயற்சியாக, பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அந்த 5 நகரங்களிலும் பெட்ரோல்-டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இந்த 5 நகரங்களைத் தவிர்த்து, நாட்டின் பிற அனைத்துப் பகுதிகளிலும் பெட்ரோல்-டீசலின் விலையை மாதத்துக்கு 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
பெட்ரோல்-டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை, உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment