30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு.
மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
புதிய ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார்.
‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதில் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே 60 நகரங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு திட்டமான ஸ்மார்ட் நகரம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டையொட்டி, தில்லியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு 30 புதிய நகரங்கள் பட்டியலை இன்று வெளியிட்டார்.
தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் நகங்கள் எவை?
கேரள மாநிலம் திருவனந்தபுரம், சத்தீஸ்கர் மாநிலம் நயா ராய்பூர், குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திர மாநிலம் அமராவதி, பிஹார் மாநிலம் பாட்னா, தெலங்கானாவில் கரீம்நகர், பிஹாரில் முசாபர் நகர், புதுச்சேரி, குஜராத் காந்திநகர், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசத்தின் சாகர், ஹரியாணாவின் கர்னால், மத்தியப்பிரதேசத்தின் சட்னா, கர்நாடகாவின் பெங்களூரு, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, உத்தராகண்டின் டேராடூன், தமிழகத்தின் திருப்பூர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சின்ச்வாட், பிம்ப்ரி, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகட், ஜம்மு, குஜராத்தின் தாஹோத், தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி, மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால், உ.பி.யின் அலகாபாத், அலிகார் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டோக் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தேர்வு செய்யப்பட்டுள்ள 30 நகரங்களில் 26 நகரங்கள் கையடக்க விலையில் வீட்டுமனை திட்டங்கள், அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. 26 நகரங்கள் புதிய பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள்யும் 29 நகரங்கள் சாலை மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் முன்வைத்துள்ளதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இதற்காக ரூ.57,33 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment