ஆண்டுக்கு 60 முறை வரி தாக்கல் செய்ய வேண்டுமா? : வணிக வரித்துறை அதிகாரி விளக்கம்


''ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில் ஆண்டுக்கு, 60 முறை, 'ரிட்டர்ன்' தாக்கல் செய்ய வேண்டும் என்பது தவறு. மாதத்திற்கு, மூன்று வீதம், 36 முறை, தாக்கல் செய்தால் போதும். அது, தமிழக வணிகர்களுக்கு
ஏற்கனவே பழக்கமானது தான்,'' என, வணிக வரித்துறை, இணை கமிஷனர், டி.சவுந்தரராஜ பாண்டியன் தெரிவித்தார்.

'தினமலர்' நாளிதழ் கருத்தரங்கில், ஜி.எஸ்.டி., வரி நடைமுறைகள், பின்பற்ற வேண்டிய கடமை மற்றும் செயலாக்கம் பற்றி, அவர் பேசியதாவது: 'வாட்' வரி விதிப்பு முறையில், வரி செலுத்துவதற்கான, 'சி' படிவம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது தெரிந்ததே. அது, அடுத்த மாதம் முதல் இருக்காது. ஜி.எஸ்.டி.,யில், மாநில ஜி.எஸ்.டி., - மத்திய ஜி.எஸ்.டி., என்பது, அந்தந்த மாநிலங்களுக்குள் நடைபெறும் வர்த்தகத்திற்கானது. ஐ.ஜி.எஸ்.டி., என்பது, மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தகத்திற்கானது. ஆண்டு வர்த்தகம், 1.50 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள வணிகர்களில், 90 சதவீதம் பேர், மாநில அரசின் நிர்வாகத்திலும், 10 சதவீதம் பேர், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இருப்பர். 1.5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்வோரில், 50 சதவீதம் பேர், மாநில அரசு; 50 சதவீதம் பேர் மத்திய அரசு கண்காணிப்பில் இருப்பர். இது, மூன்று ஆண்டுகளுக்குப்பின், சுழற்சி முறையில் மாற்றப்படும். இனி, இரு முக கட்டுப்பாடு நீங்கி, ஒரு முக கட்டுப்பாடு தான் இருக்கும்.
'ரிட்டன்' தாக்கல் : ஆண்டு வர்த்தக விற்று முதல், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த வணிகர்கள், ஜி.எஸ்.டி., யில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதற்கு குறைவாக இருப்போர், விருப்ப அடிப்படையில் பதிவு செய்யலாம். மேலும், ஜி.எஸ்.டி.,யில், ஆண்டுக்கு, 60 அல்லது, 70 முறை, 'ரிட்டர்ன் ' தாக்கல் செய்ய வேண்டும் என, பரவியுள்ள தகவல் தவறானது.
ஜி.எஸ்.டி., ஆர் -1; ஜி.எஸ்.டி., ஆர் - 2; ஜி.எஸ்.டி., ஆர் - 3 என, மூன்று படிவங்கள் உள்ளன. அதில், ஜி.எஸ்.டி., ஆர் -1 என்பது, தமிழகத்தில், தற்போதுள்ள, 'அனெக்சர் - 2' போன்றது. அதை பிரதி மாதம், 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி., ஆர் - 2 படிவத்தில், தகவல்கள் தானாகவே பதிவாகி விடும். அது சரியாக உள்ளதா என, 15ம் தேதிக்குள் உறுதிப்படுத்தினால் போதும். பின், இரண்டையும் சரி செய்து, 20ம் தேதிக்குள், ஜி.எஸ்.டி., ஆர் - 3 என்ற, மாதாந்திர படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.ஏற்கனவே, 'அனெக்சர் - 1, அனெக்சர் - 2, படிவம் - ஐ' ஆகிய மூன்று, 'ரிட்டர்ன்'களை, தமிழக வணிகர்கள் தற்போது பதிவு செய்து வருகின்றனர். எனவே, இது, தமிழக வணிகர்களுக்கு புதிதல்ல. அதேபோல, இனி, காசோலை, ரொக்க பரிவர்த்தனை இருக்காது. சிறு வணிகர்கள், வங்கியில், 'சலான்' நிரப்பித் தந்தால் போதும். வணிக வரி அலுவலகம் வரத் தேவையில்லை.'வாட்' வரி விதிப்பில், 'ரீபண்ட்' கோரிக்கைகளை, ஆறு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அபராதம் : ஆனால், ஜி.எஸ்.டி.,யில், இரண்டு ஆண்டுகள் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. 90 நாட்களில், 'ரீபண்ட்' தராவிட்டால், ஊழியர்களுக்கு, ஆறு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதனால், 'ரீபண்ட்'இனி விரைவாக கிடைக்கும்.இது தவிர, செயல்பாடு நன்றாக உள்ள சில இனங்களில், வணிகர்களுக்கு, 90 சதவீத, 'ரீபண்டு' உடனே வழங்கப்படும்; மீதத்தொகை ஒரு வாரத்தில் தரப்படும். இதற்காக, வணிகர்களுக்கு, 'ரேங்கிங்' தரப்படும். இது, ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர்பேசினார்.
பழைய பொருட்களுக்கு வரி குறைப்பு உண்டா? : 'தினமலர்' நாளிதழ் நடத்திய, ஜி.எஸ்.டி., கருத்தரங்கில், வணிகர்களின் சில கேள்விகளுக்கு, நிபுணர்கள் அளித்த பதில்:
பாலகிருஷ்ணன், கழிவு காகித வியாபாரிகள் சங்கம்: பதிவு செய்யாத டீலர்கள், காகித கழிவை புறநகருக்கு கொண்டு செல்லும் போது ஆவணம் தேவையா? பதிவு செய்ய தேவையில்லாத வணிகர்கள், சரக்கு வாங்கியதை காட்டும், 'பாட் நோட்' வைத்திருந்தால், வணிக வரி அதிகாரிகளிடம் காட்டினால் போதும்.
அப்துல்லா கமால், ஆட்டோ மொபைல் டீலர் நிறுவன அலுவலர்: ஆட்டோ மொபைல் தொழிலில், பிரிக்கப்படும் பழைய பொருட்கள்,வேறு பொருட்களாக மாற்றப்பட்டும், 'ஸ்க்ராப்' ஆகவும் விற்கப்படும். பழைய பொருட்களுக்கு, வரி குறைப்பு உண்டா? இதற்கான விதிமுறைகள் இன்னும் வரவில்லை. இது பற்றிய இறுதி அறிவிக்கையை, ஜி.எஸ்.டி., கவுன்சில், விரைவில் வெளியிடும்.
பதிவு செய்யப்படாத டீலரிடம் சரக்கு வாங்குவோர், பதிவு பெற்ற டீலராக இருந்தால், அவரே ஒரு ரசீதை உருவாக்கி, வரியை செலுத்தி பயன் பெறலாம். 
வி.பி.மணி, தலைவர், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கம்: ஏற்கனவே, தமிழக பொது விற்பனை வரி சட்டம்,'வாட்' வரி சட்டம் போன்றவற்றில், வணிகர்கள் சேரும் போது, அதிகாரிகள், ஐந்து மடங்கு லஞ்சம் பெற்றனர். ஜி.எஸ்.டி.,யில், லஞ்சம் கண்காணிக்கப்படுமா?
அதிகாரிகள், சிங்கம் போன்றவர்கள்; மக்கள், எருது போன்றவர்கள். எருதுகள் தனித்தனியாக இருக்கும் வரை தான், சிங்கங்கள் கர்ஜிக்கும். எருதுகள் இணைந்தால், சிங்கங்கள் அஞ்சும். லஞ்சத்தை அரசு கண்காணிக்கும் என்றாலும், மக்களும் இணைந்து ஒழிக்க முற்பட வேண்டும்.
பெண் தொழில் முனைவோர்: ஜி.எஸ்.டி., அமலாகும்போது, வீட்டு உபயோகப் பொருள் சேவைக்கும், உதிரி பாகங்களுக்கும், தனித்தனி வரி கட்ட வேண்டுமா? ஜி.எஸ்.டி., வரியில், காம்போசிட் வரி என்று ஒன்று இருக்கும். எனவே, மேற்கண்ட இரு வரிகளில்,
எது அதிகமோ, அதை, இரண்டிற்கும் செலுத்த வேண்டும். 
பயனுள்ள கருத்தரங்கம் 
'வளர்ச்சிக்கு முக்கியம்': ஜி.எஸ்.டி., விளக்க கருத்தரங்கம் மிகஎளிமையாகவும், புரியும் வகையிலும் இருந்தது.வர்த்தகர்களின் கேள்விகளுக்கு, நிபுணர்கள்பொறுமையாக பதில் அளித்தனர். ஜி.எஸ்.டி., வரி, வர்த்தகர்களுக்கு எதிரானது என்பது போல பேசப்பட்டு வந்த நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு,இந்த ஒரு முனை வரிவிதிப்புமிக முக்கியம் என்பதை அறிய முடிந்தது.
எஸ்.ராதாகிருஷ்ணன், குரோம்பேட்டை
'கூடுதல் நேரம் ஒதுக்கி இருக்கலாம்'
அடுத்த மாதம், ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வரும் நிலையில், 'தினமலர்' நாளிதழ் நடத்திய
கருத்தரங்கம், சமூக நோக்கம் உடையது; பாராட்டுக்குரியது. ஜி.எஸ்.டி., வரிக்கு மாறுவது, வரி செலுத்துவதில் உள்ள நடைமுறைகள் மற்றும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில், கருத்தரங்கம் அமைந்தது. கேள்வி - பதிலுக்கு இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கி இருக்கலாம்.
எஸ்.கணேசன், எழும்பூர்
'வரி விதிப்பின் அவசியத்தை உணர்ந்தோம்'
நாட்டு நலப்பணி திட்டங்களுக்கு, வரி எவ்வளவு முக்கியம் என்பதும், ஒரே மாதிரியான வரியால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தெரிந்து கொண்டோம். வணிகர்களின் சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்தது. வரி விதிப்பு முறையில் ஏற்படும், ஆரம்ப கால சிக்கல் குறித்தும்
விவரிக்கப்பட்டது. 
ஜி.நாராயணன், கே.கே.நகர்
'எதிர்பார்த்ததை விட கூடுதல் தகவல்'
கருத்தரங்கில், எதிர்பார்த்ததை விட கூடுதல்தகவல்கள் கிடைத்தன. வாங்குவது, விற்பது உள்ளிட்ட, பல வித வரி விகிதங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். வணிகர்களுக்கு நிபுணர்கள் நல்ல தெளிவை ஏற்படுத்தினர். பொது சேவையில் ஈடுபடும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
சுந்தரி மகேஷ், திருவொற்றியூர்
'மாணவியருக்கும் நேரடியாக பலன்'
எங்கள் பள்ளியில் இருந்து, பிளஸ் 2 படிக்கும்,13 மாணவியரை அழைத்து வந்தேன். நேர்முக, மறைமுக வரிகள் குறித்து, வர்த்தகர்கள்,ஆடிட்டர்கள், பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு, நிபுணர்கள் பொறுமையாக விளக்கம் தந்தனர். வரிகளின் முக்கியத்துவம், வரியால் ஏற்படும் நன்மைகள், நாட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விளக்கம் பெறுவதாக நிகழ்ச்சி அமைந்தது. அது, மாணவியருக்கு நேரடியாக பயனளித்தது.
சந்தியா கார்த்திக், கொளத்துார்
'பணி தொடரட்டும்'
தினமலர் நாளிதழ் ஒருங்கிணைத்த இந்தகருத்தரங்கம், மிக அருமையாக இருந்தது. இதனால், வரி செலுத்துவதில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து நடத்த வேண்டும். 
வசந்தி ஜெயராமன், கிண்டி

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank